search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் 4 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    திருச்சியில் 4 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • விசாரணை முடிவில் மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் விமான நிலையப் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    கடந்த வாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அது புரளி என்பது தெரியவந்தது.

    இதனால் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சியில் 4 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை ஒரு தகவல் வந்தது. அதில் திருச்சி மாநகரில் உள்ள பிரபலமான 4 ஓட்டல்களின் பெயர் குறிப்பிட்டு அந்த ஓட்டல்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து 4 ஓட்டல்களுக்கும் போலீசார் விரைந்தனர். ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் 4 பிரிவுகளாக சென்று 4 ஓட்டல்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஓட்டல் அறைகள், வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து இதுபற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? எந்த முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் இந்த மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×