search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சபரிமலை சீசன் காரணமாக கறிக்கோழி விலை சரிவு
    X

    சபரிமலை சீசன் காரணமாக கறிக்கோழி விலை சரிவு

    • பண்ணைகளில் வழங்கப்பட்டு வரும் கோழிகளின் எடை அதிகரித்து வருகிறது.
    • கூடுதல் நாட்கள் பண்ணைகளில் வைத்து கோழிகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வாரம் ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன.

    பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு, கோழிகளின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. சமீப நாட்களாக கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளது. இதனால் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி விட்டதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் கறிக்கோழியை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தீபாவளிக்கு முன்பு வரை பண்ணைகளில் கறிக்கோழிகளின் கொள்முதல் விலை கிலோ ரூ.100 ஆக இருந்தது. தற்போது ரூ.20 குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் கிலோ ரூ.250 வரை விற்பனையானது. தற்போது நுகர்வு குறைந்துள்ளதால் விலை குறைந்து கிலோ ரூ.200-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:-

    சில நாட்களாக கறிக்கோழி நுகர்வு குறைந்து வருகிறது. ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி வருவதால் கார்த்திகை மாதம் விற்பனை குறைவது வழக்கம் தான். இந்த முறை முன் கூட்டியே விற்பனை சரிவடைந்துள்ளது.

    இதனால் பண்ணைகளில் வழங்கப்பட்டு வரும் கோழிகளின் எடை அதிகரித்து வருகிறது. கூடுதல் நாட்கள் பண்ணைகளில் வைத்து கோழிகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விற்பனையை அதிகப்படுத்த வேண்டி கொள்முதல் விலையை குறைத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×