என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆத்தூர் அருகே விபத்து- ஆம்னி பஸ் மீது கார் மோதி 6 பேர் பலி
- ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அந்த வழியாக வந்தது. கார் மேம்பாலம் அருகே ரோட்டில் ஏறியபோது திடீரென ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.
- காரின் முன்பகுதி, உள்பக்கம் அனைத்தும் அப்பளம்போல் நொறுங்கியது. கார் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து 30-வது நாள் காரிய நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.
இந்த நிலையில் இரவு கண் விழித்து தூங்காமல் இருப்பதற்காக நேற்று இரவு டீ குடிக்க வேண்டி ஆத்தூர் பஸ் நிலையத்திற்கு அவரது உறவினர்கள் ராஜேஷ், சந்தியா உள்பட 11 பேர் ஆம்னி காரில் சென்றனர். அங்கு ஒரு டீ கடையில் அனைவரும் டீ குடித்து விட்டு அங்கிருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினர்.
காரை ராஜேஷ் ஓட்டி வந்தார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓட்டம்பாறை மேம்பாலம் பகுதியில் வலது புறத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அந்த வழியாக வந்தது. கார் மேம்பாலம் அருகே ரோட்டில் ஏறியபோது திடீரென ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி, உள்பக்கம் அனைத்தும் அப்பளம்போல் நொறுங்கியது. கார் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது.
இந்த விபத்தில், காரை ஓட்டிய ராஜேஷ் (வயது 29), காருக்குள் இருந்த சந்தியா (20), சரண்யா (26), ரம்யா (25), சுகன்யா (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பெரியண்ணன், கிருஷ்ணவேணி, சுதா, புவனேஸ்வரன், உதயகுமார், தன்ஷிகா (11) ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் அவர்கள் கதறினர்.
இதை பார்த்த பொதுமக்கள் இது பற்றி ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள், கார் இடிபாடுகளில் இருந்து படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆத்தூர் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து இடிபாடுகளை அகற்றி 6 பேரையும் மீட்டு மோட்டார்சைக்கிள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 11 வயது சிறுமி தன்ஷிகா சேலம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
உயிரிழந்த 5 பேர் உடல்களும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா மற்றும் ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அங்கு சென்ற மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். துக்க நிழ்வுக்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மாரிசாமி என்பவரது மனைவி சுதா (23), பெரியசாமி மகன் பெயரியண்ணன் (38) , ஹரிமூர்த்தி மகள் புவனேஸ்வரி (17), செல்வராஜ் மனைவி கிருஷ்ணவேணி (45), சிவகுமார் மகன் உதயகுமா ர் (17)ஆகிய 5 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சந்தித்த கலெக்டர் கார்மேகம் மற்றும் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர். மேலும் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் உடனுக்குடன் செய்யவும் டாக்டர்களிடம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். அப்போது கதறி அழுதவர்களை கலெக்டர் தேற்றினார். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியையும் கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் பார்வையிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்