search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலுக்கு சென்ற போது பரிதாபம்: லாரி மீது கார் மோதி தாய்- மகன்  பலி
    X

    கோவிலுக்கு சென்ற போது பரிதாபம்: லாரி மீது கார் மோதி தாய்- மகன் பலி

    • காரில் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரி:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனவைி பரிமளா (வயது 40), இவர்களது மகன் அருண்ராஜ் (19).

    பழனிவேல் குடும்பத்துடன் தனது காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு புறப்பட்டார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். அதிகாலை சுமார் 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது.

    அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. வேகமாக லாரி மீது கார் மோதியதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து லாரியில் சிக்கிக் கொண்டது.

    இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த பழனிவேல் மகன் அருண்ராஜ் மற்றும் அருண்ராஜின் தாய் பரிமளா ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் மோதி விபத்தில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அவரை புவனகிரி போலீசார் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கார் லாரியில் லாவகமாக சிக்கிக்கொண்டது. இதனால் போலீசாரால் விக்கியை காரியிலிருந்து மீட்க முடியவில்லை.

    உடனடியாக புவனகிரி போலீசார் சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் சிக்கிக்கொண்ட டிரைவர் விக்கியை போராடி பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த பரிமளா, அவரது மகன் அருண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×