search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலைய வளாகத்தில் மோதல்: சேலம் அருகே 3 பேர் அதிரடி கைது
    X

    போலீஸ் நிலைய வளாகத்தில் மோதல்: சேலம் அருகே 3 பேர் அதிரடி கைது

    • ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.
    • போலீஸ் நிலையம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே மாமுண்டி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் சக்திவேல் (வயது 29), மளிகை கடை வைத்துள்ளார்.

    இவர் நண்பருடன் சேர்ந்து கடந்த 18-ந் தேதி இரவு காளிப்பட்டியில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த முனுசாமி மகனான பெயிண்டர் நவீன்குமார் (27) என்பவரும் நண்பர்களுடன் வந்து மது அருந்தினார்.

    அப்போது திடீரென நவீன்குமார் நண்பர்களுக்கும், சக்திவேல் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் கோஷ்டியினர், சக்திவேல் கோஷ்டியினரை சிறிது தூரம் துரத்தி சென்று தாக்கினர்.

    அப்போது சக்திவேல் வயிற்றில், குளிர்பான பாட்டிலை உடைத்து நவீன் குமார் குத்தினார். இதில் காயமடைந்த சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுக்க அன்று இரவு 10 மணிக்கு மேல் சென்றனர்.

    இந்த நிலையில், நவீன்குமார் தரப்பினரும் அங்கு வந்தனர். அப்போது, தங்களை தாக்க வருவதாக நினைத்து, நவீன்குமார் தரப்பினர் சக்திவேல் தரப்பினரை தாக்கினர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் போலீஸ் நிலையம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இதை பார்த்த போலீசார் இரு தரப்பையும் விலக்கி விட்டனர். ஆனாலும் அவர்கள் மாறி மாறி தாக்கினர். இதில் ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். போலீசாரும் அவர்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நிலை தடுமாறினர். இதனால் போலீஸ் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒரு வழியாக, மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் விலக்கிவிட்டு சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து சக்தி வேல் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் நவீன்குமார், சத்யராஜ் (28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்கள் மீது கெட்ட வார்த்தையால் திட்டுதல், கும்பலாக சேர்ந்து தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதில் தொடர்புடைய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பார்ப்பவர்களை பீதி அடைய செய்துள்ளது.

    Next Story
    ×