search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழரை பிரதமர் ஆக்குவோம் என்ற அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை- மு.க.ஸ்டாலின்
    X

    தமிழரை பிரதமர் ஆக்குவோம் என்ற அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை- மு.க.ஸ்டாலின்

    • நடப்பு ஆண்டில் கோடை பருவத்தில் பெய்த மழையினால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது.
    • பா.ஜ.க.வினுடைய 9 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்டேன். அந்த கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

    மேட்டூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணை மதகுகளை திறந்து வைத்து பூக்கள் தூவி டெல்டா குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேட்டூர் அணை கட்டப்பட்டது பற்றிய அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க அரசு, மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த வருடத்தில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள். இதுவரை இல்லாத ஒரு சாதனையாக மிக குறுகிய காலத்தில் 1.5 லட்சம் வேளாண் மின் இணைப்பு புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    இப்படி எண்ணற்ற திட்டங்களை வேளாண் துறை மூலமாக நிறைவேற்றி வருகிறோம். அதுபோல் 3-வது ஆண்டாக மேட்டூர் அணையை குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ம் நாள் திறந்து வைக்க நான் வந்து இருக்கிறேன். குறிப்பிட்ட நாளில் திறந்து வைத்தால் மட்டும் போதாது. அது கடைமடை வரை காவிரி நீர் சென்றடைய வேண்டும். அதற்கும் நாம் திட்டமிட்டோம். அதற்காக, கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.62 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    காவிரி நதிநீரை பயன்படுத்தி குறுவை நெல் சாகுபடி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசு ரூ.61 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறுவை நெல்சாகுபடி தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தியது.

    இதன் காரணமாக காவிரி நதி நீர் கடைமடை வரைக்கும் சென்று கடந்த 2021-ம் ஆண்டு குறுவை பருவத்தில் 4.9 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    அதேபோல் கடந்த 2022-ல் மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தினால் 19 நாட்களுக்கு முன்னதாகவே அதாவது மே.24-ந்தேதி அன்று மேட்டூர் அணையை திறக்க நம்முடைய அரசு ஆணையிட்டது. 19 நாட்களுக்கு முன்னதாகவே அணை திறந்தாலும் அதற்கு முன்கூட்டியே அனைத்து கால்வாய்களும் தூர்வாருவதற்கு நீர்வளத்துறை ரூ.80 கோடி மதிப்பீட்டில் அரசு ஆணையினை உரிய காலத்தில் வெளியிட்டு அந்த பணிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

    அனைத்து தரப்பு உழவர்களும் அப்போது மகிழ்ச்சி அடைந்தார்கள். அதற்கான பாராட்டும் தெரிவித்தார்கள்.

    கடந்த ஆண்டும் காவிரி நதி நீரை பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கத்தில் ரூ.61 கோடியே 12 லட்சம் செலவில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவை பருவத்திற்கு தேவைப்படும் குறைந்த வயதுடைய நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பயிர் கடன் போன்ற இழப்பீடுகளும் டெல்டா மாவட்டத்தினுடைய விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டன. இதன் விளைவாக கடந்த ஆண்டு குறுவை சாகுபடி கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சாதனையாக 5.36 லட்சம் ஏக்கரை கடந்து, 17.76 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

    நடப்பு ஆண்டில் கோடை பருவத்தில் பெய்த மழையினால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது. மேலும் சென்ற ஆண்டில் மேட்டூர் அணை நீரை மிகவும் கவனமாக பயன்படுத்தியதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 103.35 அடியாக உள்ளது. எனவே மேட்டூர் அணையினை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி திறப்பதற்கு நம்முடைய அரசு முடிவு எடுத்தது.

    நீர்வளத்துறை கடந்த 2 ஆண்டுகளில் டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் எல்லாம் மேற்கொண்டது. இதற்காக நடப்பாண்டில் 90 கோடி ரூபாய் அரசு அதற்காக அனுமதி அளித்தது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார். தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார்.

    இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

    தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தது என அமித்ஷா பட்டியல் போட்டு இருக்கிறார். நான் சேலத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் இது பற்றி தெளிவாக பேசி இருக்கிறேன். அதாவது பா.ஜ.க. ஆட்சி இருந்தபோது எந்த சிறப்பு திட்டங்களும் இந்த 9 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி இருந்த தி.மு.க. அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்ன? என்ன? தனி சிறப்புகள் எல்லாம் திட்டங்களாக வந்தது என பட்டியல் போட்டு நான் காட்டி இருக்கிறேன். அதை ஒரு வேளை அவர் படிக்கவில்லையா? அல்லது அதை படித்து யாராவது அதைப்பற்றி எடுத்துச் சொல்லவில்லையா? என எனக்கு சந்தேகம்.

    பா.ஜ.க.வினுடைய 9 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்டேன். அந்த கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

    தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷா பேசியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை. அவர் வெளிப்படையாக சொன்னார் என்றால் அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்ல முடியும்.

    இருந்தாலும் தமிழர் பிரதமராக ஆக்க போகிறேன் என சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரதமர் மோடி மேல் என்ன கோபம் என தெரியவில்லை. 2024-ல் பா.ஜ.க.வினுடைய பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தமிழிசை, முருகன் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×