search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் நாளை அரசு விழா: 4 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
    X

    பொள்ளாச்சியில் நாளை அரசு விழா: 4 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

    • புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
    • தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந்தேதி) கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் முடிவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    இதுதொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந் தேதி) பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

    வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, எரிசக்தி துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, காவல்துறை, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அயலக தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வு துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், நகராட்சி நிர்வாகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    இவ்விழாவில், அமைச்சர்கள், கலெக்டர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), பொள்ளாச்சி சார் ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×