search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்காளதேசம்-மியான்மர் இடையே மோக்கா புயல் இன்று கரையை கடக்கிறது: லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்
    X

    வங்காளதேசம்-மியான்மர் இடையே 'மோக்கா' புயல் இன்று கரையை கடக்கிறது: லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்

    • மியான்மரில் சிட்வே பகுதியில் நேற்று முன்தினம் முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
    • இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மோக்கா புயல் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு மற்றும் அதைஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவான 'மோக்கா' புயல் நேற்று முன்தினம் இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது.

    நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடலில் போர்ட் பிளேயரில் இருந்து 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே நிலை கொண்டிருந்தது. மோக்கா புயல் இன்று தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மரில் உள்ள தியாக்பியூ இடையே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மோக்கா புயல் இன்று வங்காளதேச கடற்கரையை நெருங்கியது. காக்ஸ் பஜார் பகுதியில் கரையை கடக்கும் முன்பு பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து வங்காள தேசம், மியான்மரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும் காக்ஸ் பஜார் பகுதியில் ரோங்கியா அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 10 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் மியான்மரின் மேற்கு ரக்கைன் கடற்கரையில் உள்ள சிட்வேயில் உள்ள முகாம்களிலும் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    புயலையடுத்து காக்ஸ் பஜார் பகுதியில் 1.90 லட்சம் பேரையும், சிட்டகாங்கில் 1 லட்சம் பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வங்காளதேச அதிகாரிகள் இடம் மாற்றி உள்ளனர். அவர்கள் 4 ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 21 கப்பல்கள், கடல் ரோந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

    அதேபோல் மருத்துவ குழுக்கள், ஆம்புலன்சுகள் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன. வெள்ளம், சூறாவளி ஆகியவற்றால் காக்ஸ் பஜாருக்கு அதிக ஆபத்து ஏற்படலாம் என்றும் சூறாவளியால் 8 கடலோர கிராமங்களில் கடுமையான சேதம் ஏற்படலாம் என்றும் வங்கதேச ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மலை மாவட்டங்களான ரங்கமதி, பந்தர்பன், கக்ராச்சாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பேரிடர் மேலாண்மை குழுவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் மீட்புபணி நடந்து வருகிறது.

    மியான்மரில் சிட்வே பகுதியில் நேற்று முன்தினம் முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மோக்கா புயல் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×