search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    • கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.

    இதே போல் ஆர்.கே.வி. சாலையில் இருந்து மணிக்கூண்டு வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள பிருந்தா வீதி, வேலா புக்ஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ஜவுளி கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.

    இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இதையடுத்து இன்று மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    கச்சேரி வீதி, முத்துரங்கம் வீதி, சிவா சண்முகம் வீதி, அண்ணாச்சி வீதி, நேதாஜி வீதி, மணிக்கூண்டு, கொங்கலம்மன் கோவில் போன்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் பாஸ்கர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உடன் உள்ளனர். ஒருசில நாட்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×