search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் இன்று மாலை அண்ணாமலை, கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்
    X

    ஈரோட்டில் இன்று மாலை அண்ணாமலை, கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

    • தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
    • பிரசாரம் வரும் 25-ந் தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது.

    தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24,25-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார்.

    இதைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி,வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்டமாக எடப்பாடி பழனிசாமி வரும் 24, 25 ஆகிய 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். இதே போல் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளிமாவட்ட நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே 3 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்டமாக வரும் 21-ந்தேதி முதல் மீண்டும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தே.மு.தி.க. சார்பில் மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்றும் நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இன்று மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் அண்ணாமலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் பகுதியிலும், இரவு 7 மணிக்கு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும், இரவு 8 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் தனது 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் ஓங்காளியம்மன் கோவில், காந்தி சிலை, மற்றும் வி.வி.சி.ஆர். நகரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதேபோல் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை வீரப்பன்சத்திரம், திருநகர் காலனி, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ். நகர், கிருஷ்ணா தியேட்டர், வி.வி.சி.ஆர் நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரசாரம் வரும் 25-ந் தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    Next Story
    ×