search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது
    X

    4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

    • விவசாய நிலத்தில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது.
    • ஆத்திரமடைந்த உரிமையாளர் ஜே.சி.பி. ஆப்ரேட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றார்.

    செம்பட்டி:

    கன்னிவாடி அருகே 4 வழிச்சாலைக்காக விவசாய நிலத்தை அழிக்கக்கூடாது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி விவசாயிகள் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து இன்று போராட்டம் நடத்த இருந்த நிலையில், 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை பிடுங்கியதால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டு கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தர்மத்துப்பட்டி-கோம்பை செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கோவில் உள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு நல்லாசெட்டியார் பூசாரியாக உள்ளார். அங்குள்ள கோவில் நிலத்தை இவர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் ஒட்டன்சத்திரம் முதல் ஜெ.மெட்டூர் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தர்மத்துப்பட்டி கோம்பை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் போது சம்பந்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீடுகளையும், விவசாய நிலங்களையும் அழித்து சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டரிடம் புகார் வழங்கிய நிலையில் இதுகுறித்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் விவசாய நிலத்தில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது. தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்காக, அதிகாரிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் மிரட்டி வருவதாக கூறி, விவசாய சங்கம் சார்பாக இன்று சம்பந்தப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் போராட்டம் நடத்திய அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி அகற்றினர்.

    அப்போது, ஜே.சி.பி. எந்திரம் வைத்து தென்னை மரங்களை சாய்த்ததில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருகாரின் மீது தென்னை மரம் விழுந்ததில் கார் சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் ஜே.சி.பி. ஆப்ரேட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றார்.

    பின்னர் செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அவரை பிடித்து அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆண்கள் மற்றும் பெண்களை போலீசார் வேனில் குண்டுகட்டாக தூக்கி ஏற்றி கொண்டு சென்றனர். வீட்டில் இருந்த பெண்களை போலீசார் கையை பிடித்து இழுத்து வெளியேற்றினர். தொடர்ந்து இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×