search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
    X

    வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

    • காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
    • கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெல்லை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களையும், பயிர்களையும் அழிக்கும் காட்டுப்பன்றியை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி இன்று பாளை பெருமாள்புரத்தில் உள்ள நெல்லை மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் ஆபிரகாம் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியதாவது:-

    நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்துள்ளோம். மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் வன விலங்குகள் ஏற்படுத்தும் சேதங்கள் தான்.

    காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் மானாவாரி பயிர்களை கூட விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நாங்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறோம்.

    நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட எந்த பயிர்களுக்கும் ஆதார விலை கூட அரசு வழங்காமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை நன்றாகப் பெய்து தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி உள்ளோம்.

    எனவே காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் எவ்வித சிரமமும் இன்றி விவசாயத்தில் ஈடுபட முடியும்.

    100 சதவீதம் நடக்க வேண்டிய விவசாயம் தண்ணீர் இருந்தும் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் 40 சதவீதம் தான் நடக்கிறது. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து அவை வீணாகி விடுகிறது.

    இந்த கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×