search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது
    X

    சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது

    • ரெயில் கருப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது எஸ்.1 கோச்சில் கழிவறை அருகில் சோதனை செய்தபோது கருப்பு கலர் சோல்டர் பேக் தனியாக கிடந்தது.
    • போலியாக சப்-இன்ஸ்பெக்டர் என்று அடையாள அட்டை தயாரித்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் அதிக அளவில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தப்படுவதும் அதனை தடுக்க ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு கைது செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜு மற்றும் போலீசார் முனுசாமி, பிரபாகரன், ஆகியோர் ரெயிலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா? என தன்பாத் விரைவு ரெயிலில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சேலம் வரை இன்று அதிகாலை சோதனை செய்தனர்.

    அப்போது ரெயில் கருப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது எஸ்.1 கோச்சில் கழிவறை அருகில் சோதனை செய்தபோது கருப்பு கலர் சோல்டர் பேக் தனியாக கிடந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அதன் அருகில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா கடத்தி வந்ததை ஒத்துக்கொண்டார். மேலும் அவர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள நடூர் திரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ஜப்ரில் என்பவரது மகன் அப்துல் முஷீத் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரை சோதனை செய்தபோது ஒரு அடையாள அட்டை இருந்தது. அதில் அப்துல் முஷீத் சப்-இன்ஸ்பெக்டர் என்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் கேட்டதற்கு போலியாக சப்-இன்ஸ்பெக்டர் என்று அடையாள அட்டை தயாரித்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×