search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள்- ஆசிரியர்களுடன் கவர்னர் கலந்துரையாடல்
    X

    கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள்- ஆசிரியர்களுடன் கவர்னர் கலந்துரையாடல்

    • கவர்னர் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • கவர்னர் வருகையை எதிர்த்து ராமநாதபுரத்தில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    ராமநாதபுரம்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) மற்றும் நாளை (19-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலையத்தில் கவர்னரை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் காலோன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு கவர்னர் அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    ராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற கவர்னரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்பு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு கார் மூலம் ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.

    அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்ற அவர், மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் அங்குள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார். பின்பு மீண்டும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

    இதையடுத்து மாலை 4.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மேல்தேவிபட்டிணத்தில் உள்ள நவபாஷாண கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு தேவிப்பட்டிணம் செல்லும் கவர்னர், மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். அதனை முடிந்து கொண்டு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார்.

    இரவில் அங்கு தங்கி ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (19-ந் தேதி) காலை 7 மணியளவில் சத்திரக்குடி அருகே உள்ள எட்டிவயல் கிராமத்திற்கு சென்று தரணி முருகேசன் என்பவரின் இயற்கை வேளாண்மை பண்ணையை பார்வையிடுகிறார்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்டு காலை 10 மணியளவில் திருஉத்தர கோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதனை முடித்து கொண்டு மீண்டும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு கவர்னர் திரும்புகிறார்.

    அங்கு மதிய உணவை முடிக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, பிற்பகல் 3 மணியளவில் கார் மூலம் பரமக்குடி செல்கிறார். அங்கு இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்கிருந்து கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

    அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக மாலை 6 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கவர்னர் வருகையை எதிர்த்து ராமநாதபுரத்தில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கவர்னர் பயணிக்கக் கூடிய சாலைகள், அவர் செல்லக்கூடிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×