search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேகேபள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
    X

    பேகேபள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

    • திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
    • பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. 6 வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் செப்டம்பர் 26-ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்த நிலையில், ஒரு வாரத்திலேயே வகுப்பறையின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு வெளியில் வராண்டாவில் மேற்கூரையிலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று 3-வது முறையாக வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில், கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.

    திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    நேற்று, பள்ளி வராண்டாவில் ஓவியப் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து. அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால், நல்வாய்ப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.

    பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×