search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
    • சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த வாசுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    தமிழ்நாடு அரசின் முறையான அனுமதி பெற்று, கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பேரையூர் அருகே உள்ள சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறேன்.

    இந்நிலையில் சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு கட்டிடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்தனர். இதனையடுத்து நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது தூரம் தள்ளி வைத்தோம். இதற்காக தேவையற்ற பிரச்சனையை எழுப்பி என் மீதும் எனது குடும்பத்தினர் மீது டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். இதனையடுத்து மீண்டும் இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் எதிர்தரப்பினர் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர். இதுகுறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாக தாக்கி இழிவான வார்த்தைகளால் திட்டினர். ஏற்கனவே அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சமூக ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து அனுமதியின்றி சட்டவிரோதமாக குறிப்பிட்ட சாதி சமூகத்தினர் வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும். கொலைமிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பேனர் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், இந்த விவகாரத்தில் போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×