search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஈரோட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்
    X

    ஈரோட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்

    • 6 ஆண்டுகளாக வழங்கப்படாத கூலி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    • சுமைதூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பார்க் ரோடு, மூலபட்டறை குப்பைகாடு போன்ற பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட லாரி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த லாரி மூலமாக வெளிமாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக இந்த நிறுவனங்களில் அவர்கள் சுமைதூக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசனுடன் அனைத்து தொழிற்சங்கம் நிர்வாகம் ஒப்பந்தம் செய்து மூன்றாண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கையெழுத்தாகி கூலி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

    கடைசியாக 2016-ம் ஆண்டு முதல் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் கூலியில் இருந்து 41 சதவீத கூலி உயர்வு மற்றும் இரவு எட்டு மணிக்கு மேல் லோடு ஏற்றுவதாக இருந்தால் இரவு சாப்பாடுக்கு 75 ரூபாய் வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நிர்வாக தரப்பினர், தொழிலாளர் தரப்பினர் கையெழுத்திட்டு ஒப்பந்தம் தயார் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் அதன் பிறகு கூறியபடி சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

    எனவே ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசினும் மற்றும் ரெகுலர் லாரி சர்வீஸ் நிறுவனங்களில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈரோடு மாவட்ட அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதையன், டி.பி.டி.எஸ். சங்கத்தின் தலைவர் பெரியார் நகர் மனோகரன், சி.ஐ.டி.யு. தலைவர் தங்கவேலு, மத்திய சங்கத்தின் தலைவர் விஜயகுமார், பாட்டாளி தொழிற்சங்க கவுரவ தலைவர் எஸ்.ஆர்.ராஜூ, ஈரோடு மாவட்ட பொது தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் உள்பட அனைத்து சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    6 ஆண்டுகளாக வழங்கப்படாத கூலி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    சுமைதூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×