search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் மலைப்பகுதியில் கனமழை- காட்டாற்று வெள்ளத்தில் பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு
    X

    பர்கூர் மலைப்பகுதியில் கனமழை- காட்டாற்று வெள்ளத்தில் பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு

    • வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, பவானி போன்ற இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • மேல்மட்ட பாலம் அமைத்தாலும் மீண்டும் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு பாலம் இடிந்து விடும் என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. அனல் காற்று, புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு ஒரு சில இடங்களில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசாக மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

    இதேப்போல் வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, பவானி போன்ற இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 38.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேப்போல் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு 33 குக்கிராமங்கள் உள்ளன. மேற்கு மலை, கிழக்கு மலை என 2 பகுதிகளாக உள்ள இந்த பர்கூர் மலையில் கிழக்கு மலை பகுதியான ஈரெட்டி பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஈரெட்டி பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மழை தண்ணீர் மூழ்கடித்து சென்றது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களும், பொதுமக்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    பின்பு தண்ணீர் வரத்து மெல்ல மெல்ல குறைந்த பிறகு இரு புறங்களிலும் வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் தவித்தனர்.

    தற்போது தரைப்பாலத்தில் மேல்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பாலத்திற்கு கீழே தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஓடையில் தண்ணீர் அதிகமாக வரும் பகுதியில் தூண்கள் அமைக்காமல் தண்ணீர் குறைவாக வரும் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த மேல்மட்ட பாலம் அமைத்தாலும் மீண்டும் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு பாலம் இடிந்து விடும் என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினர்.

    எனவே இதனை அதிகாரிகள் பார்வையிட்டு வெள்ளநீர் அதிக அளவில் வரக்கூடிய இடத்தில் தூண்கள் அமைக்க வேண்டும். அதன் பிறகு மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வரட்டுபள்ளம்-38.6, அம்மாபேட்டை-22.6, கவுந்தப்பாடி-20, பவானி-2.

    Next Story
    ×