search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர் பிரபல தோல் தொழிற்சாலையில் வருமான வரி சோதனை- சென்னை உள்பட 50 இடங்களில் வேட்டை
    X

    ஆம்பூர் பிரபல தோல் தொழிற்சாலையில் வருமான வரி சோதனை- சென்னை உள்பட 50 இடங்களில் வேட்டை

    • வேலூர் பெருமுகையில் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
    • 2 கார்களில் வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டது.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஷூ கம்பெனி மற்றும் தோல் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு உயர்தரம் மிக்க ஷூ மற்றும் பெல்ட், பர்ஸ், பேக் வகைகள் என பல்வேறு தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன.

    இதில் பரிதா குரூப்ஸ் ஷூ மற்றும் தோல் தொழிற்சாலைகள் பிரபலமானதாகும். ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுச்சேரி, சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை, ஷூ கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    ஆம்பூரில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது. ராணிப்பேட்டையில் பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 3 தொழிற்சாலைகள் உள்ளன.

    ஆம்பூர் துத்திபட்டு, மோட்டு கொல்லை, எம்.சி.ரோடு ஆகிய இடங்களில் உள்ள பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஷூ மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    வருமான வரித்துறை அதிகாரி கிருஷ்ண பிரசாத் தலைமையில் காலை 8 மணிக்கு 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருமான வரித்துறையினர் 100-க்கும் மேற்பட்டோர் இந்த தொழிற்சாலைகளுக்கு வந்தனர். அவர்கள் உள்ளே சென்று அங்குள்ள அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டன. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    ஆம்பூர் பஜார் பின்புறம் நாகேஸ்வரன் கோவில் அருகே உள்ள தோல் கம்பெனியின் அதிபர் வீட்டிலும் சோதனை நடந்தது.

    வேலூர் பெருமுகையில் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இதில் 2 கார்களில் வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டது.

    இந்த தொழிற்சாலையில் மட்டும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    வருமான வரி சோதனையால் இந்த அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இதேபோல ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் உள்ள பரிதா குரூப்ஸ் சொந்தமான தோல் தொழிற்சாலைகளில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சென்னை, புதுச்சேரி, ஆம்பூர், ராணிப்பேட்டை உள்பட பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

    சென்னை ராமாபுரம் மவுண்ட் பூந்தமல்லி ரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலையின் அலுவலகத்திலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

    Next Story
    ×