search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அளுந்தூரில் 700 காளைகள், 350 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு- 5 வீரர்கள் காயம்
    X

    திருச்சி அளுந்தூரில் 700 காளைகள், 350 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு- 5 வீரர்கள் காயம்

    • திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பட்டையாதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ராம்ஜிநகர்:

    திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமம் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த வருடமும் 700 காளைகள் 350 மாடுபிடி வீரர்கள் பங்குபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி பழனியாண்டி எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், மின்விசிறி, பாத்திரங்கள் ரொக்க பரிசு போன்றவை வழங்கப்பட்டன. மாடுகளை அடக்க முற்பட்ட திண்டுக்கல் பூபதி ராஜா (25) குஜிலியம்பட்டியை சேர்ந்த தங்கவேல் (25) பாகனூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (35) கோடாங்கி பட்டியைச் சேர்ந்த சின்னு (35) விராலிமலையை சேர்ந்த விஜயகுமார் (27) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் அளுந்தூர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி, நாகமங்கலம் வெள்ளைச்சாமி, நாவலூர் குட்டப்பட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ், தி.மு.க. நிர்வாகிகள் யாகபுடையான் பட்டி ஆரோக்கியசாமி, மலைப்பட்டி சந்திரன் மற்றும் மணிகண்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்து கருப்பன், தொழிலதிபர் மங்கதேவன் பட்டி கணேஷ் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பட்டையாதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×