search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பறக்கும் படை சோதனையில் ரூ.5.82 லட்சம் பறிமுதல்
    X

    பறக்கும் படை சோதனையில் ரூ.5.82 லட்சம் பறிமுதல்

    • பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திசையன்விளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    திசையன்விளை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 245 இருந்தது. அந்த வாகனத்தில் வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் திசையன்விளையை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராஜதுரை (வயது 29) என்பது தெரிய வந்தது.

    சிகரெட் வியாபாரியான அவர் விற்பனையை முடித்துவிட்டு அதற்கான பணத்தை பெற்று வந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திசையன்விளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை அடுத்த கக்கன் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவரது காரில் சுமார் 35 பவுன் தங்கநகை, 140 செட் பரிசு பொருட்கள் மற்றும் ஏராளமான சேலைகள் இருந்தன. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    காரில் வந்த நபர் திசையன்விளை அருகே உள்ள அழகியவிளையை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 48) என்பதும், தற்போது ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் சொந்த ஊரில் நடைபெறும் அய்யா கோவில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்குவதற்காக பரிசு பொருட்கள் எடுத்து செல்வதாகவும், 35 பவுன் தங்க நகைகள் தனது குடும்பத்தினருடையது என்றும் கூறினார்.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை என்பதால் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து நாங்குநேரி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×