search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலாஷேத்ரா உதவி பேராசிரியர் தலைமறைவு
    X

    கலாஷேத்ரா உதவி பேராசிரியர் தலைமறைவு

    • பாலியல் தொல்லை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஹரி பத்மன் தலைமறைவாகியுள்ளார்.
    • கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஹரி பத்மன் ஐதராபாத் சென்றிருந்தார்.

    சென்னை:

    மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது. அதன்பின்னர் இந்த விவகாரம் அடங்கியது. இந்த நிலையில் இந்த கல்லூரியில் மீண்டும் பாலியல் தொல்லை பிரச்சினை எழுந்தது.

    பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி விஜயகுமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் கலாஷேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு அளித்தார்.

    அதில், 'கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்தார்' என்று கூறி இருந்தார்.

    அவரது புகார் மனு தொடர்பாக அடையார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது 509 இந்திய தண்டனை சட்டம் (வார்த்தை ரீதியாக பாலியல் துன்புறுத்தல்), 354 ஏ (உடையை வைத்து வர்ணிப்பது) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    இந்த 3 பிரிவுகளும் கடுமையான சட்டப்பிரிவுகள் ஆகும். இந்த வழக்குகளின் கீழ் பேராசிரியரை ஹரிபத்மனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். அவர், ஐதாராபாத்தில் இருப்பதாக கூறப்பட்டது. எனவே தனிப்படை அமைத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் முனைப்பு காட்டினர்.

    இந்நிலையில், பாலியல் தொல்லை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஹரி பத்மன் தலைமறைவாகியுள்ளார்.

    கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த அவர் சென்னை திரும்பிய நிலையில், தலைமறைவாகியுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×