என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலையில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
- காப்பு கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர்.
- விழா நாட்களில் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
திருப்பரங்குன்றம்:
தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் முதலாம் படை வீடாக திகழும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று காலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதனையொட்டி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியாருக்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து காலை 9 மணிக்கு கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டினர்.
இந்த விழாவில் மதுரை மட்டுமல்லாது சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினார்கள். காப்பு கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர். மேலும் காலை, மாலை வேளைகளில் சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவார்கள்.
அதேபோல் விழா நாட்களில் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். வருகிற 7-ந்தேதி வரை சுவாமி உற்சவர் சன்னதியிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருளுவார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல்வாங்கும் நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதியும், மறுநாள் 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன் சூரசம்ஹாரமும் நடைபெறும். 8-ந்தேதி காலை சிறிய சட்டத் தேரோட்டமும், மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனமும் நடைபெற உள்ளது.
மதுரை பகுதியில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் விழா தொடங்கிய இன்று முதல் 7 நாட்களும் திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பர். மேலும் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். கோவில் சார்பில் பக்தர்களுக்கு தங்க வசதியாக கோவில் வளாகத்தில் மின்விளக்கு, மின்விசிறி, பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி சார்பில் கிரிவலப்பாதை பகுதி, பேருந்து நிலையம், கோவில் வாசல் முன்பு மற்றும் மலைக்கு பின்புறம் குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணிசெல்வம், பொம்மதேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இதேபோல் ஆறாம் படை வீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சண்முகார்ச்சன, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
இதேபோல் விழா நாட்களில் சுவாமி காமதேனு, யானை, ஆட்டுக்கிடாய், சப்பரம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 7-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மதியம் 3.45 மணிக்கு வேல்வாங்குதலும், 4 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும் கோவில் ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில் சுப்பிரமணிய சுவாமி வதம் செய்கிறார்.
8-ந்தேதி திருக்கல்யாணமும், அன்று மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடாசலம், அறநிலையத்துறை இணை இயக்குனர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்