search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டேங்க் ஆபரேட்டர் கத்தியால் குத்தி கொலை- தொழிலாளி கைது
    X

    டேங்க் ஆபரேட்டர் கத்தியால் குத்தி கொலை- தொழிலாளி கைது

    • வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த எர்ரஅள்ளி கருகன்சாவடி சேர்ந்தவர் வேலன் (வயது42).

    இவர் குடிநீர் தொட்டி டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மாலை 5 மணிக்கு காவேரிப்பட்டணத்தில் ஏழுஜடை முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஏரி அருகேமின் மோட்டார் அணைக்க சென்றார்.

    அங்கு அதே பகுதியை சார்ந்த முனியப்பன் என்பவர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து வேலன் முனியப்பனுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன் அங்கிருந்த மீன் வெட்டும் கத்தியால் வேலனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறி சம்பவ இடத்திலேயே வேலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து அந்த பக்கம் சென்றவர்கள் வேலன் கீழே பிணமாக இருப்பதை பார்த்து உடனடியாக காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து வேலனின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஏரியில் இருந்த மீன் ஷெட்டுக்கு தீ வைத்தனர்.

    இதனால் மீன்பிடிக்கும் செட்டுக்குள் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்தது.

    பின்பு பாலக்கோடு ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினர். பின்பு அவர்கள் அங்கிருந்து காவேரிப்பட்டணம்-சேலம் மெயின் ரோடு, பாலக்கோடு பிரிவு சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்தவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பேப்பருக்கு தீவைத்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் அவர்களை சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. அப்பொழுது அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். இதனை அடுத்து வேலனை கொலை செய்த முனியப்பன் தருமபுரிக்கு தப்பி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் மற்றும் போலீசார் உடனே விரைந்து வந்து தருமபுரி பஸ் நிலையத்தில் தலைமறைவாக இருந்த முனியப்பனை நேற்று இரவு கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள்ளாகவே கொலையாளி முனியப்பனை போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

    மேலும் 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்து கடையில் மது பானங்கள் விற்கப்படுகிறது.

    குறிப்பாக பாலக்கோடு ரோட்டில் உள்ள சந்து கடையில் 24 மணி நேரமும் கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் குடித்துவிட்டு ரோட்டில் செல்பவர்களை குடித்துவிட்டு வீண் தகராறுகள் ஏற்பட்டு தற்போது நடந்த கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது என்றனர்.

    எனவே இப்பகுதியில் உள்ள சந்துகடைகளில் 24 மணிநேரமும் நடைபெறும் மது விற்பனையை உடனடியாக அதிகாரிகள் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    Next Story
    ×