search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநாடு நடத்தும் நடிகர் விஜய்-க்கு வாழ்த்துகள்- கே.பி.முனுசாமி
    X

    மாநாடு நடத்தும் நடிகர் விஜய்-க்கு வாழ்த்துகள்- கே.பி.முனுசாமி

    • மத்திய அரசின் திட்டங்களை ராஜதந்திரத்துடன் செயல்பட்டு முழுமையாக வாங்கி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.
    • மத்திய அரசு ஆணையின்படியே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    போதையின் பாதையில் இளைஞர்கள் சென்று விடக்கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிவுரை வழங்க அவருக்கு தகுதியில்லை.

    அதேபோல, கடந்தகால அ.தி.மு.க., அரசு மத்திய அரசிடம் தமிழகத்தை அடமானம் வைத்து விட்டதாகவும் பேசியுள்ளார்.

    ஆனால் அ.தி.மு.க., அரசுதான் தமிழகத்தின் மதிப்பை உயர்த்தியது. அதனால்தான் மத்திய அரசு பல்வேறு துறைகளில் தமிழகத்திற்கு முதலிடம் வழங்கியது.

    மத்திய அரசின் திட்டங்களை ராஜதந்திரத்துடன் செயல்பட்டு முழுமையாக வாங்கி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    ஆனால் தமிழகத்தில் 4 ஆண்டு ஆட்சி நடத்திவரும் தி.மு.க., அரசு அப்படியில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு குறித்து மேடையில் வீராப்பாக பேசிவிட்டு, தனியறையில் மோடியிடம் மண்டியிட்டு, மெட்ரோ திட்டத்திற்கு நிதி பெற்றுள்ளார். மத்திய அரசு ஆணையின்படியே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டது.

    கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட எண்ணேகொள்புதூர் வலது, இடது புற கால்வாய் நீட்டிப்பு பணி மந்தமாகியுள்ளது. நிதி ஒதுக்கவில்லை, நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை.

    இது குறித்து கலெக்டரிடம் தெரிவித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதுமாறு வலியுறுத்தியுள்ளேன்.

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டை முன்னிட்டு பெரியார் கட்அவுட் வைத்துள்ளனர். அவரில்லாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது. மாநாடு நடத்தும் விஜய்-க்கு வாழ்த்துகள்.

    கடந்த காலங்களில் ஆந்திராவில் சிரஞ்சீவி இது போன்று பிரமாண்ட மாநாடு நடத்தி கட்சி தொடங்கினார். தற்போது நடிகர் விஜய்யும் அதேபோன்று மாநாடு நடத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×