என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரை ரெயிலில் தீ விபத்து சம்பவம்: பாதுகாப்பு ஆணையர் 2-வது நாளாக இன்று தீவிர விசாரணை
- விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து நேரடியாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.
- விபத்து குறித்து விசாரணை நடத்த குறைந்த பட்சம் ஒரு மாதமாவது தேவைப்படும்.
மதுரை:
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுற்றுலா வந்த ரெயில் பெட்டியில் விதிகளை மீறி பயன்படுத்தப்பட்ட கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆன்மீக பயணம் வந்த 9 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 விமானங்களில் சென்னையில் இருந்து லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்த அனைவரும் உரிய சிகிச்சைக்கு பிறகு நேற்று இரவு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு சென்ற அவர்கள் தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களான மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரை விட்டனர்.
தீ விபத்து நடைபெற்ற ரெயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் இரு நாட்களாக சோதனை நடத்தி தீ விபத்துக்கு காரணமான பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினர். நேற்று இரண்டாவது நாளாக விபத்து நடந்த ரெயில் பெட்டியை ஆய்வு நடத்தினர். அப்போது அதிலிருந்த ஒரு இரும்புப் பெட்டிக்குள் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக 500, 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனையும், ரெயில் பெட்டிக்குள் இருந்த சிலிண்டர், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.
இந்த நிலையில் தெற்கு சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணையை தொடங்கினார். நேற்று காலை ரெயில்வே கோட்ட அலுவலக கூட்டரங்களில் முதற்கட்டமாக ரெயில் தீ விபத்தில் காயமடைந்து மதுரை ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து ரெயில் விபத்தின்போது அதில் இருந்து குதித்து தப்பியோடிய 5 சுற்றுலா நிறுவன ஊழியர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் இரு சமையல் உதவியாளர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் நேரில் சென்று ரெயில் பெட்டியில் ஏறி ஆய்வு மேற்கொண்ட பின்னர் நேற்று மாலை மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டவுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
முதல் நாள் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பாதுகாப்பு ஆணையர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. முதலில் தீ விபத்தின் போது தப்பியோடிய சுற்றுலா நிறுவன சமையல் உதவியாளர்கள் இருவரிடம் மீண்டும் 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் போது பொதுமக்கள் யாரேனும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களோ அல்லது வேறு ஏதேனும் ஆவணங்களோ இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் எனவும், மேலும் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் மூலமாகவும் அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் யாரும் சம்பவம் குறித்து தெரிவிக்க வருகை தரவில்லை.
விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து நேரடியாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் சம்பவத்தின் போது ரெயில் பெட்டி எரியும் வீடியோ வெளியானது தொடர்பாகவும், தீ விபத்தின் போது அருகில் இருந்த ரெயில் பெட்டியை இயக்கியவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
விபத்தின் போது தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினரிடமும், ரெயில் பெட்டி புக் செய்யப்பட்டது தொடர்பாகவும், விபத்து ஏற்பட்ட பெட்டியில் பயணிப்பதற்கான முறையாக அனுமதிக்கப்பட்டதா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தவும் ஏ.எம்.சவுத்ரி திட்டமிட்டுள்ளார்.
அதேபோல் கடைசியாக இந்த சுற்றுலா ரெயில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வந்தது. எனவே அங்கு ரெயில் பெட்டியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விசாரணை நடத்தும் வகையில் நாகர்கோவிலில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், டெக்னீஷியன்கள், அதிகாரிகள் ஆகியோரை மதுரைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று விசாரணையை தொடங்கிய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி கூறுகையில், இந்த ரெயில் விபத்தில் சதிச்செயல்கள் எதுவும் அரங்கேறவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்த குறைந்த பட்சம் ஒரு மாதமாவது தேவைப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்