search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் கைது
    X

    மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் கைது

    • மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
    • நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் காப்பிகாடு பகுதியை சேர்ந்த டயானா என்ற பெண்ணிடம், 16½ பவுன் தங்க சங்கிலியை கடந்த 4-ந் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த சாலையோரம் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் டயானாவிடம் நகை பறித்ததாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது அலிகான் (வயது 24), அப்துல் ராசிக்(29) ஆகியோரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவனாக சேக்ஜாமான் மைதீன் என்பவர் செயல்பட்டதும் இந்தக் கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள சேக்ஜாமான் மைதீனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அதில் கிடைக்கும் பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று சொகுசாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×