search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கண்டெய்னர் லாரி மோதி முதியவர் பலி- கிராம மக்கள் மறியல்
    X

    கண்டெய்னர் லாரி மோதி முதியவர் பலி- கிராம மக்கள் மறியல்

    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது70). அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    இவர் தனது சைக்கிளில் பெட்டேரால் பங்க் நோக்கி சென்றார். வல்லூர் சந்திப்பில் வந்தபோது சென்னை துறைமுகம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ஆசீர்வாதம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்லும் போது குண்டும் குழியுமான சாலையில் மண், தூசி பரந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், கண்டெய்னர் லாரிகளை சாலையில் நிறுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி பொன்னேரி- திருவெற்றியூர் சாலையில் திடீர்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியையும் சிறை பிடித்தனர். வாகனங்கள் மணலி புதுநகர் சாலை, மீஞ்சூர் சாலையில் நீண்ட வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதேபோல் மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை குருவி மேடு சாலையில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலைகள் மிகவும் பழுதடைந்து வீடுகள் முழுவதும் தூசி படிந்து சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தூசு பறக்கும் சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் குருவி மேடு கொண்டக்கரை-மணலி புதுநகர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×