search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு- சகோதரனுக்கும் உடல் நிலை பாதிப்பு
    X

    பலியான முகேஷ்

    மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு- சகோதரனுக்கும் உடல் நிலை பாதிப்பு

    • தமிழக அரசு மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும்.
    • நோய்க்கான காரணம் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு முகேஷ் (வயது 10). ஹரீஷ் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். முகேஷ் அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், முகேசுக்கு லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடிய "வில்சன் காப்பர்" என்ற மர்ம நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல் முழுமையாக செயல் இழந்தது.

    இதனையடுத்து, மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது மேலும் அவருக்கு துணை நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கூறியதால், அமைச்சர் இ.பெரியசாமியின் பரிந்துரையின்பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக, சிறுவனின் குடும்பத்தினரை அழைத்து பேசி நோய் விவரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் சிறுவனை சென்னை ஸ்டான்லி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவ குழு மூலம் ஆயத்த பரிசோதனைகள் செய்து வந்த நிலையில் திடீரென கடுமையான வயிற்றுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து அவரின் உடல் சொந்த ஊரான செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அக்கிராமத்தையே கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

    மேலும், அந்த குடும்பத்திற்கு அடுத்த பெரும் பேரிடியாக, அந்த தம்பதியினரின் மற்றொரு மகனான ஹரீசுக்கும் அதே மர்ம நோயின் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவனுக்கும் கல்லீரல் தொடர்பான தீவிர சிகிச்சையளிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே பல லட்சங்களை செலவு செய்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று தனது ஒரு மகனை காப்பாற்ற முடியாமல் போன நிலையில் மற்றொரு மகனுக்கும் அதே தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த கொடிய நோயால் மூத்த மகன் முகேஸை பரிகொடுத்த பெற்றோர்களுக்கு, இளைய மகனுக்கும் அதேநிலை என்பதால், பெற்றோர்கள் மட்டுமின்றி உறவினர்கள் என அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசு மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும். மேலும் இந்த நோய்க்கான காரணம் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×