search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் நூதன முறையில் மோசடி- தோஷம் கழிப்பதாக கூறி வீட்டுக்குள் புகுந்து பணத்தை அபேஸ் செய்த சாமியார்
    X

    நாகர்கோவிலில் நூதன முறையில் மோசடி- தோஷம் கழிப்பதாக கூறி வீட்டுக்குள் புகுந்து பணத்தை அபேஸ் செய்த சாமியார்

    • நேசமணி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • ஒரு வீட்டில் மட்டும் தான் கைவரிசை காட்டி உள்ளாரா? அல்லது பல்வேறு வீடுகளில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை.

    நாகர்கோவில்:

    இன்றைய உலகில் பல வகையிலும் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல் நடமாடி வருகிறது. இருந்த இடத்தில் இருந்து மக்களை ஏமாற்றுவது, ஆன்லைன் மூலம் மோசடி செய்வது, ஆசைவார்த்தைகள் காட்டி பணம் பறிப்பது என பல சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை மிஞ்சும் வகையில் வீட்டிற்கே வந்து, தோஷம் கழிப்பதாக கூறி பணம் அபேஸ் செய்த சம்பவம் தற்போது நடந்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோவில் நேசமணி நகர் நெசவாளர் காலனி பகுதியில் நேற்று காவி வேட்டி, சட்டை அணிந்த ஒருவர், சாமியார் போல வலம் வந்துள்ளார்.

    அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வந்தார். வீட்டில் இருந்தவர்களிடம் தான் சாமியார் என்றும், தோஷம் கழித்து வாழ்வை வளமாக்குவேன் என்றும் கூறி உள்ளார். ஆனால் அவரது பேச்சை பலர் கேட்காத நிலையில் சிலர் மட்டும் மோசடி வலையில் சிக்கி உள்ளனர்.

    அந்தப் பகுதியில் ஒரு வீட்டிற்கு சென்ற காவி உடை சாமியார், சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து வெளியே வந்துள்ளார். பின்னர்அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டரில் ஏறி மின்னலாக மறைந்து விட்டார்.

    அவர் சென்ற சிறிது நேரத்தில், வீட்டின் உரிமையாளர் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்துள்ளார். அவர் அங்கும் இங்கும் காவி உடை அணிந்தவரை தேடினார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது, காவி உடை ஆசாமி பணம் அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது.

    காவி உடை சாமியாரிடம் மயங்கியவர், தான் ஏமாந்தது பற்றி கூறிய விவரம் வருமாறு:-

    நான் வீட்டில் தனியாக இருந்த போது, முழுவதும் காவி உடை அணிந்த ஒருவர் வந்தார். தன்னை சாமியார் என அறிமுகம் செய்து கொண்ட அவர், என்னிடம் உங்கள் வீட்டில் சிலர் செய்வினை தகடு வைத்து உள்ளனர். அதனை பரிகாரம் செய்து எடுத்து விடுகிறேன் என்றார்.

    இதனை நான் கேட்டுக் கொண்டிருந்த போது, அவர் தீர்த்தம் எனக் கூறி தான் வைத்திருந்த தண்ணீரை கையில் எடுத்து எனது முகத்தில் தெளித்தார். அந்த தண்ணீர் முகத்தில் பட்டதும் நான் மயங்கி விட்டேன். அதன்பிறகு கண்விழித்து பார்த்த போது, சாமியாரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நான், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.14 ஆயிரம் மாயமாகி இருந்தது. அதனை சாமியார் உடையில் வந்தவர் தான் அபேஸ் செய்து இருப்பார் என அவரை தேடினேன். ஆனால் அவர் மாயமாகி விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நூதன மோசடி குறித்து, நேசமணி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் காவி உடை அணிந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்வது பதிவாகி இருந்தது. அவரது உருவம் தெளிவாக தெரிந்ததால் அதன் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். அவர் ஒரு வீட்டில் மட்டும் தான் கைவரிசை காட்டி உள்ளாரா? அல்லது பல்வேறு வீடுகளில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×