search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாயை பிரிந்த மேலும் ஒரு குட்டி யானையை பராமரிக்க தயாரான பாகன் தம்பதி
    X

    தர்மபுரியில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானையுடன், முதுமலை பாகன் பொம்மன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தாயை பிரிந்த மேலும் ஒரு குட்டி யானையை பராமரிக்க தயாரான பாகன் தம்பதி

    • குட்டி யானைக்கு முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
    • குட்டி யானையை பராமரிக்கும் பணியில் பொம்மனும், அவரது மனைவி பெள்ளியும் ஈடுபட உள்ளனர்.

    ஊட்டி:

    தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த படமானது தாயை பிரிந்த 2 யானை குட்டிகளுக்கும், அதனை வளர்க்கும் தம்பதிகளுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான பாசத்தை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது. நீலகிரியில் உள்ள முதுமலை யானைகள் காப்பகத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டது.

    ஆஸ்கர் விருது பெற்றதன் மூலம் இந்த படத்தில் நடித்த ரகு, பொம்மி என்ற 2 யானைகளும், அதனை பராமரித்த பாகன் பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் தற்போது சர்வதேச அளவில் புகழ் பெற்றுவிட்டனர்.

    பாகன் பொம்மன், பெள்ளி ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கி கவுரவித்தார். ஆஸ்கர் விருதை வென்ற படத்தில் நடித்திருந்தாலும் பாகன் பொம்மன், பெள்ளி ஆகியோர் எந்தவித கர்வமும் கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் வனப்பகுதியில் கடந்த வாரம் தாயை பிரிந்து 5 மாத ஆண் குட்டி யானை ஒன்று தனியாக வந்தது. அந்த யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த குட்டி யானை விவசாய கிணற்றில் தவறி விழுந்து காயம் அடைந்தது. இதனால் அந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த குட்டி யானையை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்திருந்த பாகன் பொம்மன் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரது கண்காணிப்பில் யானை லாரியில் ஏற்றி தர்மபுரியில் இருந்து முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது.

    குட்டி யானைக்கு முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    தொடர்ந்து குட்டி யானையை பராமரிக்கும் பணியில் பொம்மனும், அவரது மனைவி பெள்ளியும் ஈடுபட உள்ளனர். மீண்டும் ஒரு குட்டி யானையை வளர்க்க உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×