search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்- சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். வாதம்
    X

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்- சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். வாதம்

    • வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என்று நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.
    • ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு, "அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும்" என்று தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் அப்பீல் செய்தனர்.

    இந்த அப்பீல் மனுக்கள் இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 'வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா?' என்று நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு அனைத்து தரப்பினரும் இறுதி விசாரணைக்கு தயார் என்றனர். பின்னர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கில் விஜய் நாராயணன், 'தற்போது ஒருங்கிணைப்பாளர் முறை இல்லை. பொதுச்செயலாளர் முறை மட்டுமே உள்ளது' என்றார்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடுகையில் கூறியதாவது:-

    இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும்? எங்கள் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதாக கூறிய தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை.

    ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார். கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியதால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே பாதுகாப்பு அளிக்கும் வகையில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கியபோது குறைந்தபட்ச விளக்கம் கோரி நோட்டீஸ் கூட அனுப்பவில்லை.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளின்படி அறிவிக்கவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட இயலும். வழக்கு விசாரணை முடியும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயணன் வாதாடுகையில், 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளருக்கு 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை. சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ். இருக்கையை மாற்றம் செய்யக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

    அதற்கு ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல் எங்களது தரப்புக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இல்லை என எப்படி கூறுவீர்கள்?" என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இறுதி விசாரணைக்கு ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ந்தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கில் இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு 3-ந்தேதி அறிவிக்க உள்ளது.

    Next Story
    ×