என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெற்ற மகளை கொன்று வாளியில் அடைத்த பெயிண்டர் கைது
- தனிப்படை போலீசார் காளிமுத்துவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்கவில்லை.
- காளிமுத்துவின் சகோதரி வீடு சிவகங்கையில் இருப்பதால் அங்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் காளிமுத்து பிடிபடவில்லை.
மதுரை:
மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது42). இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது மகள் தன்ஷிகா (8). காளிமுத்து டெய்லராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சிறுமி தன்ஷிகா 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளிமுத்து சிவகங்கையில் உள்ள சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு தனது மகளை தன்னுடன் அழைத்துச்சென்றார்.
மனைவி பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சில நாட்களுக்கு பிறகு மேலூரில் உள்ள சகோதரி வீட்டில் காளிமுத்து மட்டும் இருந்துள்ளார். அவரிடம் தன்ஷிகா குறித்து கேட்டபோது, சிவகங்கையில் தனது அக்காள் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி காளிமுத்து வீட்டில் இருந்த பரணில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பரணில் இருந்த ஒரு சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதனுள் பிளாஸ்டிக் வாளியில் அழுகிய நிலையில் சிறுமி தன்ஷிகா பிணம் இருந்தது.
தனது மகள் பிணமாக கிடப்பதை கண்டு பிரியதர்ஷினி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமி தன்ஷிகாவை அவளது தந்தை காளிமுத்துவே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை யாருக்கும் தெரியாமல் வாளிக்குள் அடைத்து சாக்கு மூட்டையில் கட்டி வீட்டு பரணில் தூக்கி வைத்து சென்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
அவரை போலீசார் தேடிய போது தலைமறைவாகி விட்டார். பெற்ற மகளை கொடூரமாக கொன்ற காளிமுத்துவை பிடிக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோர் உத்தரவின் பேரில் தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம், ஜெய்ஹிந்துபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் காளிமுத்துவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்கவில்லை. அவரது சகோதரி வீடு சிவகங்கையில் இருப்பதால் அங்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் காளிமுத்து பிடிபடவில்லை.
இந்த நிலையில் போலீசில் சிக்காமல் இருக்க காளிமுத்து பிச்சைக்காரர் வேடத்தில் திரிவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில், ஜெய்ஹிந்துபுரம் மதுபானக்கடை அருகே படுத்திருந்த காளிமுத்து போலீசாரிடம் நேற்றிரவு சிக்கினார்.
பிச்சைக்காரர் வேடத்தில் இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் பெற்ற மகளை கொன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் கூறியதாவது:-
எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நான் மாற்றுத்திறனாளி என்றபோதிலும் டெய்லர் வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இருவரும் சிரமப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்தோம்.
சம்பவத்தன்று எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மகள் தன்ஷிகாவை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு சென்றேன். எனக்கு வாழ பிடிக்காததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு எனது மகளுடன் ஜெய்ஹிந்துபுரம் வீட்டிற்கு வந்தேன். அப்போது அங்கு எனது மனைவி இல்லை. ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன். எனது மகள் மீது எனக்கு அதிக பாசம் உள்ளது. இதனால் இறந்த பிறகு அவளை யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று நினைத்தேன்.
ஆகவே மகளை கொன்றுவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன். அதன்படி மகள் தன்ஷிகாவை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்பு அவளது கை, கால்களை கட்டி வாளிக்குள் அடைத்து மூட்டை கட்டி வீட்டு பரணில் வைத்தேன்.
அதன்பிறகு நான் தற்கொலை செய்து கொள்ள பயந்து வெளியூருக்கு சென்று விட்டேன். பின்பு சிவகங்கை, ராமநாதபுரம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தேன். அங்கு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தினேன். மதுரையில் திரிந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காளிமுத்து கூறும் தகவல் உண்மைதானா? என்று போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்