search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு சுதா ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்க நடவடிக்கை- நோயாளிகள் ஆம்புலன்சுகள் மூலம் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றம்

    • சுதா ஆஸ்பத்திரி பல்துறை ஆஸ்பத்திரியாக செயல்படுவதால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற 94 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
    • இவர்களில் 46 பேரை உறவினர்கள் ஆம்புலன்சுகள் மூலம் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக ஈரோடு சுதா ஆஸ்பத்திரிக்கு சீல்வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை 15 நாட்களுக்குள் வேறு இடங்களுக்கு மாற்றவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்தனர். மேலும் ஆஸ்பத்திரிக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரணை நடத்திய தனி நீதிபதி, சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியகை அகற்ற உத்தரவிட்டார்.

    மேலும் புதிய நோயாளிகளை சேர்க்க விதித்த தடையையும் ரத்து செய்தார். அதன்படி சுகாதாரத்துறையினர் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்றினர்.

    இதற்கிடையே இதை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குநேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

    இந்த உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் சுதா ஆஸ்பத்திரிக்கு சீல்வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அங்கு பணியாற்றும் 800 டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதே நேரம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் செய்யப்பட்டது.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமகுமாரி தலைலைமயிலான அதிகாரிகள் நேற்று மாலை சுதா ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    பின்னர் அங்கு 4 அறைகளில் இருந்த 10 ஸ்கேன் எந்திரங்களுக்கும், அறைகளுக்கும் சீல் வைத்தனர். தொடர்ந்து ஸ்கேன் மையங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலையும் வழங்கினர். மேலும் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் சுகாதாரத்துறையினர் தொடங்கினர்.

    சுதா ஆஸ்பத்திரி பல்துறை ஆஸ்பத்திரியாக செயல்படுவதால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற 94 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 46 பேரை உறவினர்கள் ஆம்புலன்சுகள் மூலம் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.

    மீதம் உள்ள நோயாளிகளும் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதும் இன்று மாலை அல்லது நாளைக்குள் சுதா ஆஸ்பத்திரிக்கு முற்றிலுமாக சீல் வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் அபுல்ஹாசன் கூறியதாவது:-

    டாக்டர்கள் மீதோ, மருத்துவமனை மீதோ தவறு இருந்தால் அதற்கு என்று தனியாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கலாம். அதை விட்டு விட்டு ஒட்டுமொத்தமாக மருத்துவமனையை மூட சொல்வது நியாயம் இல்லை.

    இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் டெல்லி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம். இந்திய மருத்துவ சங்கம் அல்லாது பல்வேறு அமைப்புகள் சேர்ந்து இதுகுறித்து கடிதம் எழுத முடிவு செய்துஉள்ளனர். அந்த கடிதத்தை நாங்கள் பெற்று தமிழக அரசுக்கு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×