search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசாரணையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
    X

    துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் போலீசார் சோதனை செய்த காட்சி.

    விசாரணையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

    • சஞ்சய் ராஜா யாரும் எதிர்பாராத விதமாக தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலாவை நோக்கி சுட தொடங்கினார்.
    • ரவுடி ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதும், பதிலுக்கு போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியா பாண்டி.

    ரவுடியான இவரை கடந்த மாதம் 12-ந்தேதி இரவு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது.

    இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 4 பேரை கைது செய்து இருந்தனர்.

    மேலும் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் கடந்த வாரம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராஜாவை போலீசார் கடந்த 2-ந்தேதி முதல் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையின் போது, சஞ்சய் ராஜா, சத்தியபாண்டியை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி சீன நாட்டு துப்பாக்கிகள் என்பது தெரியவந்தது.

    இன்றுடன் அவரது காவல் முடிவதால் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா தலைமையிலான போலீசார் அவரிடம் நேற்று இரவு முதல் இன்று காலை வரை அதிரடி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது அவரிடம் உங்களுக்கு சீன துப்பாக்கியை வாங்கி கொடுத்தது யார்? கொலை சம்பவத்தில் 2 துப்பாக்கிகளை பயன்படுத்தி உள்ளீர்கள். ஆனால் ஒரு துப்பாக்கி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மற்றொரு துப்பாக்கியை எங்கு வைத்துள்ளீர்கள் என கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சஞ்சய் ராஜா, நான் துப்பாக்கியை கோவை சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேட்டில் உள்ள மலைச்சரிவில் வைத்திருப்பதாகவும், அங்கு அழைத்து சென்றால் துப்பாக்கியை எடுத்து தருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர் சத்தியமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சஞ்சய்ராஜாவை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு சரவணம்பட்டி நோக்கி அழைத்து சென்றனர்.

    சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடுக்கு சென்றதும், ஜீப்பை விட்டு இறக்கி மலையை நோக்கி அழைத்து சென்றனர்.

    அப்போது போலீசார் துப்பாக்கியை எங்கு வைத்துள்ளாய் என சஞ்சய்ராஜாவிடம் கேட்டனர். அதற்கு அவர் இந்த மலைச்சரிவில் தான் வைத்துள்ளேன். வாருங்கள் எடுத்து தருகிறேன் என கூறிக்கொண்டே சென்றார்.

    ஒரு மலை இடுக்கின் அருகே சென்றதும் சஞ்சய்ராஜா நின்று விட்டார்.

    ஏன் நின்று விட்டாய் என போலீஸ் கேட்டபோது இங்கு தான் வைத்துள்ளேன் என கூறிக்கொண்டே மலை இடுக்குக்குள் சென்றார்.

    அங்கு துப்பாக்கியை எடுத்து கொண்டு மீண்டும் வெளியில் வந்தார். அவரிடம் போலீசார் துப்பாக்கியை எங்களிடம் கொடு என கேட்டனர்.

    ஆனால் அவர் கொடுக்க மறுத்து நின்று கொண்டே இருந்தார். போலீசார் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் அவர் கொடுக்காமல் அப்படியே நின்றார்.

    சிறிது நேரத்தில் சஞ்சய் ராஜா யாரும் எதிர்பாராத விதமாக தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலாவை நோக்கி சுட தொடங்கினார்.

    துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து வருவதை பார்த்த இன்ஸ்பெக்டர், உடனடியாக தன்னை பாதுகாத்துக்கொள்ள அங்கிருந்த மரத்திற்கு பின்னால் சென்று மறைந்து கொண்டார். மற்ற போலீசாரும் மரங்களுக்கு பின் சென்று மறைந்தனர்.

    அங்கிருந்தவாறு, துப்பாக்கியை கீழே போட்டு விட்டு சரண் அடையுமாறு சஞ்சய் ராஜாவை எச்சரித்தனர். ஆனால் அவரோ அதனை எல்லாம் காதில் வாங்காமல் மீண்டும் ஒருமுறை போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

    அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்வதற்காக போலீசார் மறைந்து, மறைந்து முன்னோக்கி சென்றனர். தொடர்ந்து சஞ்சய் ராஜா துப்பாக்கியால் சுட்டதால், வேறு வழியின்றியும், தங்களை தற்காத்து கொள்வதற்காகவும், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சஞ்சய் ராஜாவின் இடது காலை நோக்கி சுட்டார்.

    காலில் குண்டு பாய்ந்ததும் சஞ்சய் ராஜா தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே போட்டார்.

    மேலும் வலி தாங்க முடியாததால் அப்படியே கீழே சுருண்டு விழுந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரின் அருகில் சென்று, கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை போலீசார் தூக்கி கொண்டு கீழே வந்தனர். தொடர்ந்து அவரை ஜீப்பில் ஏற்றி, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இன்று அதிகாலையில் மலைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். எதற்காக துப்பாக்கிச்சூடு நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். ஏராளமானோர் கரட்டுமேடு பகுதியில் குவிந்து விட்டனர். போலீசார் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கீழே அழைத்து வந்த பிறகே மலையில் போலீசார் இருந்தது மக்களுக்கு தெரியவந்தது. இதனால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியே பதற்றமாக காணப்பட்டது.

    கோவையில் இன்று அதிகாலை ரவுடி ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதும், பதிலுக்கு போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×