search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை : வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் மூழ்கி சேதம்
    X

    டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை : வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் மூழ்கி சேதம்

    • மாவட்டத்தில் பல இடங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
    • மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் பார்வையிட்டு சேதமதிப்பை கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தஞ்சையில் நேற்று மாலை 2 மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. பின்னர் இரவில் விட்டு விட்டு பெய்தன. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    தொடர் மழையால் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பின்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக பாபநாசம் தாலுகா புளியக்குடி, அருந்தவபுரம், கூனங்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் வயல்களில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.

    இதேபோல் ஓட்டை வாய்க்கால் என்னும் பாசன வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் மழை முழுவதும் வயல் வழியே செல்வதால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

    இது பற்றி விவசாயிகள் கூறும்போது, தளிகையூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கதவணை திறக்கப்படாமல் உள்ளதால் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளன. எனவே விவசாயிகளின் நலன் கருதி கதவணையை உடனடியாக திறந்தும், ஓட்டை வாய்க்காலை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மாவட்டத்தில் பல இடங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் மழைநீர் வடிவதற்கு வழியில்லாமல் தேங்கி காணப்படுவதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் பார்வையிட்டு சேதமதிப்பை கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை இருக்கும் பகுதிகளில் பள்ளியின் தலைமையாசிரியரே விடுமுறை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாமினி, கொக்காலாடி, ஆதிரெங்கம், கட்டிமேடு, வேலூர், மணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    Next Story
    ×