search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு: எடப்பாடி பகுதியில் 2-வது நாளாக பலத்த மழை கொட்டியது
    X

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு: எடப்பாடி பகுதியில் 2-வது நாளாக பலத்த மழை கொட்டியது

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • பகல் நேரங்களிலும் அவ்வப்போது பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்து செல்கின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய மழை 1 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, சித்தூர் உள்பட பல பகுதிகளிலும் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது .

    இதே போல சங்ககிரி, தலைவாசல், ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஆனைமடுவு, மேட்டூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகமாகி கடும் குளிர் நிலவி வருகிறது.

    பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தான் ஏற்காட்டில் கடுமையான குளிர் நிலவும். ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நவம்பர், டிசம்பரில் நிலவுவதை போன்று கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

    இதனால் குளிர் தாங்கும் உடைகளான சொட்டர், ஜர்கின் போன்ற உடைகளை அணிந்து தான் பொதுமக்கள் வெளியே செல்ல முடிகிறது. மழை பொழிவு அதிகமாக இருப்பதால் இங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளது.

    மேலும் மலைப்பாதைகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இதேபோல் பகல் நேரங்களிலும் அவ்வப்போது பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்து செல்கின்றன.

    பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சேலம் மாநகரில் நேற்று மதியம் 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது. மேலும் இரவு வரை மழை தூறலாக நீடித்தது. மழையை தொடர்ந்து மாநகர் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 44 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 33.2, சங்ககிரி 29, தலைவாசல் 22, ஏற்காடு 15.4, பெத்தநாயக்கன்பாளையம் 14, ஆனைமடுவு 11, மேட்டூர் 10.8, கெங்கவல்லி 10, ஓமலூர்9.4, ஆத்தூர் 3.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 202.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×