search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி ரூ.2 லட்சம் பணம் பறிப்பு: அண்ணன்-தம்பி சிறையில் அடைப்பு
    X

    பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி ரூ.2 லட்சம் பணம் பறிப்பு: அண்ணன்-தம்பி சிறையில் அடைப்பு

    • நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது.
    • அலாவுதீன், வாகித் ஆகியோர் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு முகநூலில் இருந்து துணை நடிகை பெயரில் நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் கனா தர்ஷனின் பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய பேஸ்புக் பக்கத்தில் இருந்து விடுக்கப்பட்ட நட்பு அழைப்பை ஏற்று இளம்பெண்ணும் முகநூல் வழியாக பழக தொடங்கினார்.

    அப்போது முகநூல் வழியாக இளம்பெண்ணுக்கு சினிமா, தொலைக்காட்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாங்கள் நினைத்தால் உங்களையும் பெரிய நடிகையாக்க முடியும் என்று ஆசை வார்த்தைகளை தெரிவித்து உள்ளனர். உங்களது போட்டோக்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் நடிகையாக தேர்வு செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

    இதனை நம்பி சினிமா நடிகையாகும் ஆசையில் இளம்பெண் தனது விதவிதமான போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார்.

    இதன்பிறகு இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணுக்கே அனுப்பி 2 பேர் மிரட்டி உள்ளனர். இதன்பிறகே சினிமா நடிகர் பெயரில் தொடங்கப்பட்டது போலி கணக்கு என்பது தெரிய வந்துள்ளது.

    நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது. இருவரும் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து ரூ.2 லட்சம் வரை பறித்துள்ளனர். அதன் பின்னரும் தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் பணம் பறித்த சகோதரர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அண்ணன்-தம்பி இருவரின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இருவரும் ஈரோட்டில் பி.பி.அக்ரகாரம் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்து காஞ்சிபுரத்துக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அலாவுதீன், வாகித் இருவரும் இதுபோன்று பல பெண்களை மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இதையடுத்து இருவரது செல்போன்கள், அவர்கள் பயன்படுத்திய லேப்-டாப் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும் இருந்தன.

    இதனை கைப்பற்றிய போலீசார் ரகசியமாக அப்பெண்களிடமும் புகார்களை வாங்கி மேல் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×