search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 40 ஆயிரம் பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி தீவிரம்
    X

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 40 ஆயிரம் பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி தீவிரம்

    • ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 28 ஆயிரத்து 426 வாக்காளர்கள் உள்ளனர்.
    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் உட்பட 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சின்னங்கள் கடந்த மாதம் 27-ந் தேதி தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய பேலட் பேப்பர்கள் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் சென்னையில் அச்சடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 28 ஆயிரத்து 426 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 1688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மேற்கு சட்டமன்றத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 302 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி இத்தொகுதியில் உள்ள 1,688 வாக்குச்சாவடியில் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 20 சதவீத கூடுதல் எந்திரங்கள் என 4,050 எந்திரங்களும், 2,025 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2, 194 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

    இதற்காக 40 ஆயிரம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டு சென்னையில் இரவு, பகலாக அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் தவிர வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தெரியும்படி முன் பகுதியில் வேட்பாளர் பெயர் சின்னங்களுடன் கூடிய பேலட் பேப்பர் பார்வைக்கு வைக்க வேண்டி உள்ளதால் 40 ஆயிரம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    40 ஆயிரம் பேலட் பேப்பர்களில் 50 சதவீதம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட்டு விட்டதால் சென்னையில் இருந்து பேலட் பேப்பர்கள் கொண்டு வருவதற்காக தனி குழுவினர் சென்னை சென்றுள்ளனர். ஈரோடு கொண்டு வரப்பட உள்ள பேலட் பேப்பர்கள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. முழுமையாக அச்சடிக்கப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×