search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகள்- புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிக்கு அபராதம்
    X

    சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகள்- புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிக்கு அபராதம்

    • யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.
    • சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியுடன் காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் கே.என்.ஆர் என்ற பகுதியில் 10 யானைகள் மலை சரிவிலிருந்து சாலையை கடக்க முயற்சித்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை கண்காணித்தனர். மேலும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.

    1 மணி நேரத்திற்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

    இது தொடர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறியதாவது:-

    மலைப்பாதையில் காட்டு யானைகள் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாகவும், அவற்றிற்கு தொல்லை கொடுக்க கூடாது, புகைப்படம் எடுக்க கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அதனையும் மீறி சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஏ. என். ஆர் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையை கடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்றிருந்த கோவையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் யானை கூட்டத்தை தொந்தரவு செய்யும் வகையில் செல்போனில் செல்பி எடுக்க முயன்றார்.

    இதனை பார்த்த வனத்துறையினர் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

    Next Story
    ×