search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
    X

    மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

    • இந்திய இறையாண்மைக்கு எதிரான பட்ஜெட்.
    • 600-க்கும் மேற்பட்டோர் கைது.

    கோவை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அரசியல் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    போராட்டத்தில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தையொட்டி அங்கு உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் ஆவேசமான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரவுண்டனா சாலையில் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லியும் கேட்கவில்லை.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர்.

    தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள் முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாநில குழு உறுப்பினர் ராதிகா, மார்க்சிஸ்ட் லெனின் லிஸ்ட் பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம் மற்றும் 130 பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்றன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    முன்னதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பட்ஜெட். இந்த பட்ஜெட்டினால் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இது இந்திய இறையாண்மைக்கு எதிரான பட்ஜெட். இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×