search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • சம்பவத்தன்று 2 வாலிபர்கள் மோட்டார் ரூமில் இருந்து ரூ.10200 மதிப்புள்ள வயர்களை திருடி சென்றனர்.
    • இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் சோத்துப்பாறை சாலை, மஞ்சோடை வராக நதி கரையோரம் அமைந்துள்ள லட்சுமிபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட அரசு மோட்டார் ரூமில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 2 வாலிபர்கள் மோட்டார் ரூமில் இருந்து ரூ.10200 மதிப்புள்ள வயர்களை திருடி சென்றனர்.

    இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது கெங்குவார்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, ஜெேகந்திரன் ஆகியோர் மோட்டார் ரூமில் மின் வயர் திருடியது தெரிய வந்தது. ஜெகேந்திரனை கைது செய்த நிலையில் தப்பி ஓடிய பால்பாண்டியைத் தேடி வருகின்றனர்.


    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட அணை கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் மேலூர், கள்ளந்திரி பாசனத்துக்கும், அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்டம் பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 3169 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 2352 கன அடி நீர் வருகிறது. அணையில் நீர் மட்டம் 65.16 அடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.35 அடியாக உள்ளது. 1451 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 192 கன அடி நீர் வருகிறது 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 194 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. தேக்கடி 2.2, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, ஆண்டிபட்டி 3.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • மாலை 6 மணிக்கு ஒண்டி மலை உச்சியில் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப மகா கார்த்திகை தீபம் ஏற்றிவைக்கப்பட்டது.
    • இதில் ஒரு பகுதியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு கருட பகவான் வட்டமிட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் ஒண்டி மலையடிவாரத்தில் சன்னாசியப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சன்னாசியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கண்டமனூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு ஒண்டி மலை உச்சியில் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப மகா கார்த்திகை தீபம் ஏற்றிவைக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு கருட பகவான் வட்டமிட்டது.இறைவன் கருட பகவான் வடிவில் வந்துள்ளதாக எண்ணி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் உலக மக்கள் நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபத்தை கண்டமனூர், வேலாயுதபுரம், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.

    தீபத் திருநாளை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலாயுதபுரம் கிராம பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • மழையால் மிளகாய் விளைச்சல் அதிகரித்து விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
    • பெரும்பாலான விவசாயிகள் மிளகாய்களை பறிக்காமல் செடியில் விட்டு விடுகின்றனர். இதனால் மிளகாய் செடியில் பழமாகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய த்தில் குமணன்தொழு, கோம்பைத்தொழு, பசுமலைதேரி, அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் மிளகாய் தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் மிளகாய் விளைச்சல் அதிகரித்து விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 3 மாதம் வரை ஒரு கிலோ மிளகாய் ரூ.40 வரை சந்தைகளில் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வரத்து அதிகரித்து காணப்படுவதன் காரணமாக படிப்படியாக விலை குறைந்து தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.

    இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய்களை பறிக்காமல் செடியில் விட்டு விடுகின்றனர். இதனால் மிளகாய் செடியில் பழமாகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மிளகாய் வரத்து அதிகரித்தால் விலை குறைவதும் வரத்து குறைந்தால் விலை அதிகரிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே மிளகாய் விவசாயிகளுக்கு போதுமான அளவில் லாபம் கிடைப்பதில்லை.

    எனவே மிளகாய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அம்ரூட் 2.0 திட்டப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் ,உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்ப ட்டி, காமயகவுண்டன்பட்டி, ஆண்டிப்பட்டி, ஓடைப்பட்டி, வடுகப்பட்டி மற்றும் தென்கரை ஆகிய பேரூராட்சிகளில் நடைபெறும் அம்ரூட் 2.0 திட்டப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலச்சொக்கநாதபுரம், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி காமயகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி, ஓடைப்பட்டி, வடுகபட்டி மற்றும் தென்கரை ஆகிய பேரூராட்சிகளில் அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.161.08 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் நிலை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் இப்பணிகளை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கிய காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் குடிநீர் பணிகள் எந்தவித தொய்வும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டாயம் முடிப்பதற்கான நடவடிக்கைகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர்கள் கண்காணித்து பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்திடவும் அதன் அறிக்கையினை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தேவாரம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொ துமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

    அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.264 லட்சம் மதிப்பீட்டில் 11 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பூங்கா மேம்பாட்டுப் பணிகளையும், உத்தமபாளையம் பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் எரியூட்டு மின் மயானம் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அனைத்து பேரூராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செயல் அலுவலர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கடன் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
    • சம்பவத்தன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சின்னமனூர்:

    சின்னமனூரை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங் களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி காலை நடக்கிறது.
    • நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.

    இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கங்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம். மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்,

    குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்- 1 உடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    தேனி:

    ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது,

    பெண்களுக்கு எதிரான மற்றும் மனரீதியான துன்புறுத்தலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலும் நமது சுற்றுப்புறங்களில் இருந்து தான் முதலில் தொடங்குகிறது. பெண்கள் பல நேரங்களில் இது போன்ற சம்பவங்களில் வெளியில் சொல்வது கிடையாது, பாதிப்பு அதிகமான பிறகு தான் வெளியில் சொல்கிறார்கள். இந்தநிலை மாற வேண்டும் என்பதற்காக,

    தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் ஒன்ஸ்டாப் சென்டர் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப ரீதியான பிரச்சினைகள் குறித்தும் அவசர அழைப்புகளில் தொடர்பு கொண்டு இதன் மூலம் பலர் தீர்வு காணப்பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு நல்ல சூழ்நிலை உருவாவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    திருமணமான பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற பாதிப்பு இல்லாமல் தற்பொழுது குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியான கொடுமைகள் நடந்து வருகிறது. வரும் தலைமுறையினர்களுக்கு இதுபோன்ற மனநிலை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    இதையொட்டி சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ம் தேதி வரை உள்ள 16 நாட்களுக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பணிகள் நடைபெற உள்ளது என பேசினார்.

    • கடையில் இருந்த துணிகளை தனக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றாக தேர்வு செய்து எடுத்து அதனையும் திருடிக் கொண்டு அதே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
    • அடுத்த நாள் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு ஜவுளி கடையில் கடந்த வாரம் நள்ளிரவில் புகுந்த ஒரு வாலிபர் கல்லாவில் இருந்த ரூ.1.30 லட்சத்தை திருடினார்.

    மேலும் கடையில் இருந்த துணிகளை தனக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றாக தேர்வு செய்து எடுத்து அதனையும் திருடிக் கொண்டு அதே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் பதிவான நிலையில் அதனை வைத்து போடி போலீஸ் நிலையத்தில் கடையின் உரிமையாளர் புகார் அளித்தார்.

    இதற்கு அடுத்த நாள் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். இந்த கொள்ளை வழக்கிலும் முகமூடி அணிந்த 3 பேர் ஈடுபட்டது சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொள்ளை நடந்து ஒரு வாரம் ஆகியும் சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் உருவம் கேமராவில் பதிவான போதிலும் இன்னும் போலீ சாரால் குற்றவாளியை கண்டு பிடிக்க முடி யவில்லை.

    ெதாடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் போடியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த அச்சம் அடைந்து னர்.


    • சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது.
    • கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள சிலமலை, சூலபுரம் கரட்டுப்பட்டி ராசிங்கபுரம் ராணி மங்கம்மாள் சாலை பகுதிகளில் சுமார் 400 ஏக்கருக்கும் மேல் நாட்டு ரக மொச்சை பயிறு, நாட்டு ரக தட்டை பயிறு மற்றும் ஆம்பூர் ரக வீரிய ரக தட்டை பயிறு வகைகள் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

    இதில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை மொச்சைப்பயிறு மற்றும் தட்டைப் பயிறு வகையில் பெருமளவில் விவசாயம் செய்யப்பட்டு வெளியூர்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் மொச்சை பயிர்கள் எண்ணெய் மற்றும் புரத சத்துகள் அதிகம் உள்ளதால் வெளிச்சந்தையில் தேனி மாவட்டத்தில் விளையும் மொச்சை பயிறு வகைகளுக்கு என்றும் மதிப்பு அதிகம் உள்ளது.

    டிசம்பர் மாதம் காலத்தில் பனிப்பொழிவு அதிகரிக்க அதிகரிக்க மொச்சை பயிர் சாகுபடி அதிகரிக்கும். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    பலமுறை மருந்தடித்தும் உரங்கள் இட்டும் பெய்த மழை காரணமாக மருந்தின் ஆற்றல் குறைந்து புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் கொள்முதல் விலை கிலோ ரூ.15 முதல்ரூ.20 வரை மட்டுமே பெறப்படுவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    • மாநில அளவிலான பாடத்திட்டம் எழுதுதல் பற்றிய கருத்தரங்கம் பி.எட். முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு நடைபெற்றது.
    • சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான பாடத்திட்டம் எழுதுதல் பற்றிய கருத்தரங்கம் பி.எட். முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் பியூலாராஜினி வரவேற்புரையாற்றினார். சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் யோகா அஞ்சுஸ்ரீ, செயலாளர் குணசேகரன், இணைச் செயலாளர் மணிமாறன், உதவி பேராசிரியர் அபர்ணாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி ரோடு சின்னவாய்க்கால் தெருவைச் சேர்ந்த மணிமுத்து மனைவி ராமுத்தாய் (வயது 80). கணவர் இறந்து விட்டதால் இவர் தனியாக வசித்து வந்தார். பேரன் போத்திராஜ் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.

    அவர் தினசரி ராமுத்தாய்க்கு உணவு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். இன்று காலை அவரது வீடு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை தாக்கி கொன்று விட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் (பொ) சிலை மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    மேலும் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்தும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற நபர்கள்தான் பணம் மற்றும் நகைக்காக மூதாட்டியை கொலை செய்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    ×