search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.
    • போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் தமிழக நீர் வளத்துறை பராமரிப்பில் உள்ளது.

    பூகோள அடிப்படையில் கேரளாவில் இருந்தாலும் அணை பராமரிப்பு முழுவதும் தமிழக அரசே மேற்கொண்டு வருகிறது.

    அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் அணையை உறுதி செய்யும் தன்மையை உச்சநீதிமன்றமே வல்லுனர் குழுவை 11 முறை அனுப்பி உறுதி செய்தது. அணையின் கீழ் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கிக் கொள்ள உத்தரவிட்டது. அதன்படி 10.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையில் 7.86 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தற்போது வரை தேக்கப்படுகிறது. அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியாததால் 5 மாவட்டங்களின் பாசன பரப்பை அதிகரிக்க முடியாமலும், குடிநீர் வழங்கும் பணியை விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

    இது தவிர அணையை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள கேரள வனத்துறை பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த சூழலில்தான் புதிய அணை கட்ட வேண்டும் எனவும், தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணை பலமிழந்து விட்டதால் இடிந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுவதும் சேதமாகும் என்றும், வீண் வதந்தி பரப்பி வருகிறது.

    இந்நிலையில் முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில் முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகி விட்டதால் அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தற்போதுள்ள அணைக்கு 1200 அடி கீழே புதிய அணையை கட்டிய பின்பு பழைய அணையை இடிக்க அனுமதிக்க வேண்டும். புதிய அணை கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்பும் தமிழகத்துக்கான நீர் பகிர்வு தற்போதைய நிலையிலேயே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம் அதனை நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு கடந்த 14-ந் தேதி அனுப்பியது.

    மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு வருகிற 28-ந் தேதிக்கு இது தொடர்பான கூட்டத்தை நடத்த உள்ளது. கேரளாவின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

    முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் எந்த அரசு வந்தாலும் அரசியல் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அணையை எப்படியாவது இடித்து விட்டு அந்த அணை தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. உச்சநீதிமன்றம் தலைசிறந்த வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக இருப்பதாகவும் பூகம்பம் ஏற்பட்டால் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி செய்த பின்பே 142 அடி வரை தண்ணீர் தேக்க உத்தரவிட்டது.

    அதனையும் மீறி கேரள அரசு புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருப்பது 152 அடி வரை உயர்த்த முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பணிய வைத்து முல்லைப்பெரியாறு அணையை அழித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் மென்மையான போக்கை கைவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி காலை 10 மணியளவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

    பென்னி குவிக் நினைவிடத்தில் இருந்து திரண்டு பேரணியாக சென்று கேரள மாநில எல்லையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.
    • அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்து வந்தது.

    இதனிடையே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குரங்கணி, ஊத்தாம்பாறை, கொட்டக்குடி, பிச்சாங்கரை போன்ற பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    மேலும் போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.

    ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 48.10 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 48.39 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 292 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 877 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 472 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1790 மி. கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. வரத்து 621 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2024 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.40 அடி. வரத்து 280 கன அடி. இருப்பு 328 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 88 கனஅடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வராகநதிக்கரையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கும்பக்கரை, மேகமலை, சுருளி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீராட வந்து வனத்துறை கட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    பெரியாறு 9.6, தேக்கடி 21.8, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 4.4, போடி 3.2, வைகை அணை 74.8, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 31, பெரியகுளம் 4.6, அரண்மனைபுதூர் 1.8, ஆண்டிபட்டி 25.4 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. 308 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. 135 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    தமிழக அரசு உத்தரவுப்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 5 நாட்களில் 915 மில்லியன் கனஅடி திறக்கப்பட்டது. 2ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு 4 நாட்களில் 376 மி.கனஅடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு இன்று காலை 10 மணிமுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    வினாடிக்கு 400 கனஅடி நீர் ஆற்றில் அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் வைகை கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, வேறு தேவைக்காகவோ ஆற்றுக்குள் இறங்கக்கூடாது என அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

    வருகிற 27ம் தேதி வரை 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 48.13 அடியாக உள்ளது. 292 கனஅடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 472 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. 308 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. 135 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 40.98 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    பெரியாறு 13.6, தேக்கடி 1.2, போடி 1.6, மஞ்சளாறு 17, சோத்துப்பாறை 2, வீரபாண்டி 5, அரண்மனைபுதூர் 1.8 மி.மீ. மழையளவு பதிவானது.

    • 10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் பணம் இரட்டிப்பாக மாறி இருக்கும் எனவும் உறுதி அளித்தார்.
    • விக்னேஷ்மூர்த்தியிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது அவை கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என கண்டறியப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்மூர்த்தி (வயது31). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த முருகன் மனைவி ஜோதிமணி (வயது38). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    இருவரும் கோர்ட்டுக்கு பணி நிமித்தமாக வந்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜோதிமணி தன்னிடம் வெளிநாட்டு நபர் ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.20 ஆயிரம் தருவதாக கூறுகிறார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை இரட்டிப்பாக்கி தருகிறார். தன்னிடம் போதுமான அளவு பணம் இல்லாததால் உங்களிடம் பணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் என கூறி உள்ளார்.

    அதன்படி கடந்த 12-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து ரெயில் மூலம் ஜோதிமணியும், விக்னேஷ்மூர்த்தியும் பெங்களூரு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் தங்கி இருந்தபோது வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் அங்கு வந்தார். அப்போது விக்னேஷ்மூர்த்தி தான் கொண்டு வந்த ரூ.44,500 பணத்தை அவரிடம் கொடுத்தார். அந்த நபர் ஒரு பெட்டியில் பவுடர்களை கொட்டி அதனுடன் பணக்கட்டுகளையும் வைத்து சீல் வைத்து உங்கள் ஊருக்கு சென்றவுடன் இதை திறந்து பார்க்கவும் என கூறி உள்ளார்.

    10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் பணம் இரட்டிப்பாக மாறி இருக்கும் எனவும் உறுதி அளித்தார். அதனை நம்பி விக்னேஷ்மூர்த்தி நேற்று அந்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ரூ.35 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தன்னுடன் வந்த வக்கீல் ஜோதிமணியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் முறையான பதில் அளிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த 76 எண்ணிக்கை கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் பணத்தை பெரியகுளத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் செலுத்த சென்றார். அப்போது அந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் என சம்மந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகம் சார்பில் வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அங்கு வந்து கள்ளநோட்டுகளை செலுத்த முயன்ற விக்னேஷ்மூர்த்தியை பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் விசாரணையில் நடந்த விபரங்களை அவர் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பணம் மோசடி வழக்கில் உடந்தையாக இருந்த பெண் வக்கீல் ஜோதிமணியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    விக்னேஷ்மூர்த்தியிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது அவை கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என கண்டறியப்பட்டது. தன்னிடம் பேசிய வெளிநாட்டு நபர் இதுவரை தொலைபேசி மூலம் மட்டுமே தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவருடன் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் வக்கீல் ஜோதிமணி கூறினார்.

    இருந்தபோதும் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீசார் பெங்களூருவில் இவர்கள் தங்கி இருந்த லாட்ஜில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    சம்மந்தப்பட்ட வெளிநாட்டு நபர் இதுபோன்ற வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கள்ளநோட்டுகளை கோர்ட்டு ஊழியரே பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் முற்றிலும் மழை பெய்யாது போனதால் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கோடை மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கிய நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அணையின் முழு கொள்ளவான 126.28 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது அணைக்கு நீர் வரத்து 49.63 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோடை மழை பெய்து சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • சவுக்கு சங்கரை கோவை போலீசார் கஞ்சா வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
    • சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

    இந்நிலையில், தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஜாமின் கோரிய சவுக்கு சங்கரின் மனு வரும் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெரியகுளம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவானது.

    தொடர் மழை காரணமாக பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு நேற்று 100 கன அடி வந்த நிலையில் இன்று காலை 405 கன அடியாக அதிகரித்துள்ளது. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 1745 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 51.48 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. சிவகங்கை பூர்வீக பாசனத்திற்காக கடந்த 4 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் இன்று காலை 1572 கன அடிநீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2191 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து 73 கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 103.81 அடியாக உள்ளது. வரத்து 40 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 65.76 மி.கன அடி.

    பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கும்பக்கரை அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 24.8, தேக்கடி 6, கூடலூர் 8.8, உத்தமபாளையம் 15, சண்முகநதி அணை 16.2, போடி 14, வைகை அணை 12, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 60, வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள ஆலந்தளிர் மற்றும் குமணன் தொழு கிராமத்தில் வெறிநாய் கடித்து, பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடமலைக்குண்டு பகுதியில் கடந்த சில நாட்களாக வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டி உள்ளனர்.

    மேலும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை இரண்டு நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    மூணாறில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் வந்தது. இதில் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் போடி ரெயில்வே கேட் பகுதியில் வந்த போது திடீரென பின் பக்க டயர் வெடித்து தீ பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதைப் பார்த்ததும் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.
    • 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதுடன் நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர்.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும் 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது. இது மட்டுமின்றி 21 அடி நீளமுள்ள அலகு குத்தி கோவிக்கு வந்து காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். இதனால் சித்திரை திருவிழா களைகட்டியது. 

    • தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
    • நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை பொதுமக்கள் தவிர்ப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஆண்டிபட்டி, வருசநாடு, கூடலூர், பெரியகுளம், தேனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது. மழை தொடர்ந்து பெய்தால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக உள்ளது 3 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடி திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.59 அடியாக உள்ளது. 50 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 2.6, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 7.4, சண்முகாநதி அணை 19.4, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 23, வீரபாண்டி 24, ஆண்டிபட்டி 6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
    • வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது.

    தேனி:

    பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பூதிப்புரம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 3-ந் தேதி அதிகாலை சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவருடன் தங்கி இருந்த சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு, பரமக்குடியைச் சேர்ந்த ராஜரத்தினத்தை விசாரித்தனர்.

    அவர்கள் வந்த காரில் சோதனை செய்தபோது 2.6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நடமாடும் தய அறிவியல் ஆய்வு வாகனம் மூலம் ஆய்வு செய்த போலீசார் சவுக்கு சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்கு, கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    சவுக்கு சங்கர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் 4-வது நபராக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆரைக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த திருமால் மகன் மகேந்திரன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சவுக்கு சங்கருக்கு மகேந்திரன் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 1 கிலோவுக்கு உட்பட்ட கஞ்சா வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடியும். ஆனால் மொத்தம் 3 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளதால் இந்த வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது என்றனர்.

    ×