search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை, நீலகிரியில் பரவலாக மழை
    X

    கோவை, நீலகிரியில் பரவலாக மழை

    • வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தொடர் மழையால் தொரப்பள்ளி பகுதியில் உள்ள இருவயல் ஆற்றுவாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வால்பாறை:

    கோவை மாவட்டத்தின் மலைப்பிரதேசமான வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 10 நாட்களாக இங்கு அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று மாலை வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கருமலை, அக்காமலை, வெள்ளமலை, சின்னக்கல்லார், நீரார், சின்கோனா, சிறுகுன்றா, சோலையார் அணை, உருளிகல், பண்ணிமேடு, வில்லோனி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    மாலையில் தொடங்கிய மழை இரவு வரை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக கூட்டுறவு காலனி, துளசிங்க நகர், காமராஜர் நகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    தொடர் கனமழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வால்பாறை தாசில்தார் வாசுதேவன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் கூழாங்கல் ஆறு பகுதியில் ஆய்வு செய்தனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழையால் வால்பாறையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

    கோவை மாநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கோவை குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவை குற்றாலம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 19 செ.மீ மழையும், சின்கோனாவில் 14 செ.மீ மழையும் பதிவாகி இருந்தது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சின்னக்கல்லார்-198, சின்கோனா-147, சோலையாறு அணை-122, வால்பாறை-107, சிறுவாணி அடிவாரம்-60, தொண்டாமுத்தூர்-33 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இரவும் மழை நீடித்தது. மழைக்கு கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் சாலையில் 4-ம் மைல் பகுதியில் சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டு, மூங்கில்கள் சரிந்து சாலையில் விழுந்தன.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மண்குவியலை அகற்றினர்.

    கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் மூங்கில்கள் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் தொரப்பள்ளி பகுதியில் உள்ள இருவயல் ஆற்றுவாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×