search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு-பவானி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
    X

    ஈரோடு-பவானி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

    • கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
    • போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அதியமான் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இத்தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுவும் அளித்து இருந்தனர். எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையும், மது விற்பனையும் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அதியமான் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஈரோடு-பவானி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு, அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே 24 மணி நேரமும் மது விற்பனையும், சட்டவிரோத மாக லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது. மது குடித்து வரும் நபர்களால் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    மேலும் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல் எங்கள் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.

    இதனை அடுத்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு இருந்தது.

    Next Story
    ×