search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு பாப்பான்குளம், மணி முத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளுக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

    இதுதவிர வேலை நிமித்தமாகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராள மானவர்கள் அம்பைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால், அரசு பஸ்சில் போதிய இடவசதி இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், தெற்கு பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி தினமும் ஆபத்தான பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று காலை தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் அரசு பஸ் வழக்கம்போல் வந்தபோது அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • தொழிலாளர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.
    • 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சுமார் 100 ஆண்டுகளாக சரக்கு முனையம் செயல்பட்டு வந்தது.

    கூட்ஸ் ரெயில் மூலம் கொண்டு வரப்படும் உரம், அரிசி, கோதுமை, நெல் உள்ளிட்டவைகள் இங்கிருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சரக்கு முனையத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறி, இந்த சரக்கு முனையத்தை சமீபத்தில் கங்கைகொண்டான் ரெயில் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தனர்.

    நெல்லை சரக்கு முனையத்தில் சுமார் 120 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் தங்களுக்கு கங்கைகொண்டானில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அவர்களுக்கு அங்கு பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் கங்கை கொண்டான் சரக்கு முனையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி டிரைவர்கள் ஆகியோர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணியாற்றிய பணியாளர்களை கங்கை கொண்டானில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இன்று கங்கைகொண்டான் ரெயில் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தர்ணா போராட்டத்தில் வட்டார லாரி சங்க தலைவர் அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொருளாளர் இஸ்ரவேல், மாரிமுத்து, செந்தில் குமரன், முருகன், ஆறுமுகம், வட்டார விவசாய சங்க தலைவர் இலோசியஸ், ஊர் நாட்டாண்மை துரைப் பாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் கவிதா பிரபாகரன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ராமர், மானூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார், விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும் போது, நாங்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் செயல்பட்ட போது பணிக்கு சென்ற நிலையில் அங்குள்ள தொழிலாளர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.

    கங்கைகொண்டானை சுற்றியுள்ள 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். அவர்களை இங்கே அனுமதித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அவர்களை இங்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    தகவல் அறிந்ததும் தாழையூத்து டி.எஸ்.பி. பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் ஆய்வாளர் அமுதா, தாசில்தார் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    • 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்தில் 2 உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இவற்றின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தொடர்ந்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளால் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2-வது அணு உலையில் கடந்த மே மாதம் 13-ந்தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

    தொடக்கத்தில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை திடீர் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுமார் 57 நாட்களுக்கு பிறகு நேற்று மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பழுதை சரி செய்யும் முயற்சியில் அணுமின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அணுமின்நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு டாக்டர் கைகளை சுத்தம் செய்ய சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் ஆன்ட்ரோ ரோமியன்தாஸ் (வயது 41). இவர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மருந்துகள் வாங்கிய வகையில் சில மருந்து நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காக டாக்டர் ஆன்ட்ரோ தனது அறையில் உள்ள பையில் ரூ.5 லட்சம் வைத்திருந்தார்.

    அப்போது நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு டாக்டர் கைகளை சுத்தம் செய்ய சென்றுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் டாக்டரின் அறையில் இருந்த ரூ.5 லட்சத்தை லாவகமாக திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதற்கிடையே மாலையில் டாக்டர் தனது பையை பரிசோதனை செய்தபோது அதில் வைத்திருந்த பணம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அடிப்படையில் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு பணம் திருடிய நபர் தேடி வந்தனர். இதில் அவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த ஜீவன்லால் (வயது 60) என்பதும், இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.

    • பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம்.
    • அணு உலையில் வழக்கம்போல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்தில் 2 உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இவற்றின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தொடர்ந்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2-வது அணு உலையில் கடந்த மே மாதம் 13-ந்தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து இன்று காலை 5.05 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

    தற்போது 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், படிப்படியாக இன்று மாலைக்குள் மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் அணு உலையில் வழக்கம்போல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அணுமின்நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
    • போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மிச்சிகன்:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இந்தநிலையில் மிச்சிகனில் டெட்ராய்ட் நகரின் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களாக விசாரணை மந்தமாக நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திசையன்விளையில் முகாமிட்டுள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

    ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது. இதற்கிடையே நேற்று திசையன்விளை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துறை நிர்வாகி விவேக் முருகன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். 2 பேரிடமும் 4 அதிகாரிகள் கொண்ட குழு தலா 2 மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தியது.

    அப்போது அவர்களிடம் ஜெயக்குமாருக்கு ஏதேனும் பெண்களுடன் தொடர்பு இருந்ததா? அவருடன் யாரேனும் அடிக்கடி உடன் வருவார்களா? அவர் தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களுடன் ஜெயக்குமாருக்கு எந்த வகையில் பழக்கம் இருந்தது என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு 2 பேரும் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    இதனால் கடந்த சில நாட்களாக விசாரணை மந்தமாக நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனிடையே இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திசையன்விளையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே ஒரு வேன் மற்றும் 3 ஜீப்புகளில் திசையன்விளை சென்று விசாரணையை தொடங்கினர்.

    செல்லும் வழியில் மணியன்குடி என்ற கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி விசாரித்து விட்டு பின்னர் கரைசுத்துபுதூர் நோக்கி விரைந்தனர். சுமார் 30 போலீசார் வந்துள்ளதால் திசையன்விளை சுற்றுவட்டார பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
    • வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    ஜெனின்:

    பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் படையினர் கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை நகரமான ஜெனினில் உள்ள ஒரு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

    மேலும் அந்த வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார்.
    • சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர்.

    நவாடா:

    பாம்பு கடித்து இறந்தவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கடித்த பாம்பை வாலிபர் ஒருவர் திருப்பி கடித்ததில் அந்த பாம்பு இறந்துள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    பீகார் மாநிலம் நவாடாவில் உள்ள ராஜவுலி வனப்பகுதியில் ரெயில்வே பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பாண்டுகா பகுதியை சேர்ந்த சந்தோஷ் லோகர் (வயது 35) என்ற வாலிபரும், அப்பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2-ந்தேதி இரவு சந்தோஷ் லோகர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து அப்பகுதியில் உள்ள தங்களது முகாம்களுக்கு சென்று தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு பாம்பு சந்தோஷ் லோகரை கடித்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார். மூன்று முறை அவர் பாம்பை தொடர்ந்து கடித்ததால் அந்த பாம்பு இறந்துபோனது.

    இதற்கிடையே சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் பாம்பு கடிபட்ட சந்தோஷ் லோகரை அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் சதீஷ் சந்திரசிங்கா சிகிச்சை அளித்தார். தீவிர சிகிச்சைக்கு பின் சந்தோஷ் லோகர் வீடு திரும்பி உள்ளார்.

    பாம்பு கடித்தால், கடித்த பாம்பை திருப்பி 3 முறை கடிக்க வேண்டும் என்று தங்களது கிராமத்தினர் கூறுவதாகவும், அதன்படியே பாம்பை கடித்ததாகவும் சந்தோஷ் லோகர் கூறி உள்ளார்.

    • ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.
    • மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.

    நெல்லை:

    பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு யானை, கரடி, சிறுத்தை, மிளா உள்பட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளது.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதியில் புகுந்து அச்சுறுத்துவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாக வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பாபநாசம் அருகே உள்ள கோட்டை விளைப்பட்டி கிராமத்திற்குள் புகுந்து ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.

    அந்த பகுதிகளில் உள்ள மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கோட்டை விளைப்பட்டி நடுத்தெருவில் வசித்துவரும் குமார் என்பவரின் வீட்டை சுற்றி 2 கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைத்துள்ளனர். வனத்துறை உடனடியாக கூண்டுவைத்து கரடிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

    கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேயர் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஆணையர் ஏற்றுக் கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

    இந்நிலையில், ஜூலை 8ம் தேதி நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறும் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் அறிவித்துள்ளார்.

    வெறுப்பு மேயராக, துணை மேயர் கூட்டத்தை நடத்துவார் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவை தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற கூட்டம் அறிவித்துள்ளது.

    • ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.
    • தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாஞ்சோலையில் 16 மணி நேர வேலை, குடியிருப்புகளை பழுது பார்க்காதது உள்ளிட்ட 20 பிரச்சனைகளை முன்நிறுத்தி கடந்த 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் போராட்டம் நடத்தியது.

    மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 6 தலைமுறையாக 1929-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கடந்த 15-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்று விட்டதாகவும், அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்யவும் அந்த தனியார் நிறுவனம் தவறான செயலை செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என தனியார் நிறுவனம் நிர்பந்தப்படுத்தி உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டரிடம் சென்றனர். ஆனால் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.

    முதலமைச்சர் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக பார்க்க முடியாது. முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பாக இருக்க கூடியவர் கலெக்டர்தான். ஆனால் அவரே தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியது தவறு.

    ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். பேசி முடிக்க வேண்டிய செயலை பிரச்சனையாக்கி உள்ளார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் தொழிலார்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காத போது அவர்களிடம் தனித்தனியாக பேசி கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தனியார் நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×