search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
    • உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க மாநில வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக உளவுத்துறையினர் அ.தி.மு.க தலைவர்கள் முதல் வட்ட செயலாளர்கள் வரை செல்போனில் பேசுவதை ஒட்டு கேட்கும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்காக ரூ. 40 கோடி மதிப்பில் உளவு சாதனம் ஒன்றை இறக்குமதி செய்து நாங்கள் பேசுவதை கண்காணித்து ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமோ, உள்துறை செயலாளரோ, தமிழக முதலமைச்சரோ யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    எனது புகார் மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தேர்தல் சமயத்தில் எங்களது வெற்றிக்கு பல்வேறு வியூகங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் உரையாடல் நடத்துவோம். அதனை உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் செல்போனில் இன்று காலை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று மாலைக்குள் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.

    இன்று மாலைக்குள் பதில் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் நேற்று நெல்லையில் இருந்து நாங்குநேரி வழியாக ராதாபுரம் தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராதாபுரத்தை சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகிக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதனை பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை.

    அதே நேரத்தில் நாங்குநேரி போலீசில் பிடிபட்ட அந்த பணத்தின் மதிப்பு ரூ. 28 லட்சம் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது.

    இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த பணம் யாருடையது? எதற்காக கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. அந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் முறையான விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் கெடு விதிக்கிறேன். நான் கொடுத்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளரும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை.
    • தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை உள்ளது.

    இந்த அணையை சுற்றி அகஸ்தியர் குடியிருப்பு, சேர்வலாறு, பெரிய மைலார், சின்ன மைலார், இஞ்சிக்குழி ஆகிய இடங்களில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

    இதில் 'இஞ்சிக்குழி' என்ற கிராமம் காரையாறு அணைக்கு மேல் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தென்பொதிகை மலையில் நடுகாட்டில் அமைந்துள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது வெறும் 7 குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர். இந்த மக்கள் இங்கு வாழை, மிளகு, கிழங்கு போன்ற விவசாயம் செய்தும், தேன் எடுத்தும் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

    இஞ்சிக்குழி பகுதிக்கு செல்ல எந்த ஒரு வாகன வசதியும் கிடையாது. சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காரையாறு அணையை கடந்துதான் இஞ்சிக்குழிக்கு செல்ல வேண்டும்.

    அணையை கடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் படகு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது படகில் ஆட்களை ஏற்ற மறுப்பதால் காணி பழங்குடி மக்கள் மூங்கில் மற்றும் மோட்டார் சைக்கிள் டயரால் 'சங்கடம்' கட்டி அணையை கடக்கின்றனர்.

    இஞ்சிக்குழி மக்கள் அரிசி, பருப்பு உள்பட தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வாரம் ஒருமுறை காரையாறு பகுதிக்கு வந்து செல்கிறார்கள்.

    இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இஞ்சுக்குழி மக்களுக்கு தேர்தல் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் சென்றடையவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை. அரசு சார்பிலும் ஓட்டுப்போட வரும்படி எந்த அழைப்பும் விடுப்பதில்லை என்றே கூறப்படுகிறது.

    இருப்பினும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்களிப்பதற்காக இஞ்சிக்குழி மக்கள் கீழே இறங்கி வரத் தொடங்கி உள்ளனர். காரையாறு அணை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது.

    இங்குதான் இஞ்சிக்குழி மக்கள் உள்பட அனைத்து காணி பழங்குடி மக்களும் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக 2 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு, சுமார் 25 கிலோ மீட்டர் சவாலான காட்டு பயணம் மேற்கொண்டு கீழே இறங்கி வருகின்றனர். அவர்கள் காரையாறு அருகே சின்ன மைலாரில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி விட்டு நாளை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 

    இஞ்சிகுழியில் உள்ள காணி மக்களின் குடியிருப்பு.

    இஞ்சிகுழியில் உள்ள காணி மக்களின் குடியிருப்பு.

    இது குறித்து இஞ்சிக்குழியை சேர்ந்த காணி பழங்குடி மக்கள் கூறுகையில், 'நாங்கள் நடுக்காட்டில் வசிக்கிறோம். எங்களுக்கு ஏற்கனவே எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வனத்துறையினர் படகு தர மறுப்பதால் மிக சிரமத்தோடு அணையை கடந்து எங்கள் ஊருக்கு சென்று வருகிறோம். வேட்பாளர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. யாரும் பிரசாரத்துக்கும் வருவதில்லை.

    நாங்கள் இதுவரை ஓட்டு போட்டும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. எங்களுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதில்லை.

    ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது அரசு சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வரப்போகும் நெல்லை தொகுதி புதிய எம்.பி. எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு சக கைதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை சிறைக் காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 79 நாட்களுக்கு பிறகு இன்று காலை மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
    • ஏற்கனவே 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் அணு உலையில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது.

    வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 79 நாட்களுக்கு பிறகு இன்று காலை மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது. சுமார் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் படிப்படியாக அதிகரித்து நாளைக்குள் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிவிடும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    • பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 21 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    பாபநாசத்தில் அதிகபட்சமாக 58 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 38 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 24 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 26.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அங்கு 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. பாளையில் 2 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான சாரல் அடித்தது. களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கரைகளில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், ராமநதியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறில் 1 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இன்று காலை வரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாவூர்சத்திரம், சுரண்டை, வி.கே.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
    • தமிழ் மொழியை உலக அளவில் பிரபலப்படுத்த பாஜக உறுதி.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்டோது, பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் நினைவுப் பரிசை வழங்கினர்.

    பின்னர், வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நெல்லையப்பர் காந்திமதி அம்பாளை வணங்கி என் உரையை தொடங்குகிறேன்.

    தென் இந்தியாவின் இந்த பகுதி வீரத்திற்கும், தேசபக்திக்கும் மிகவும் பிரபலமானது.

    வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியர் சுதந்திரத்திற்காக போராடியவர்கள்.

    முத்துராமலிக்கு தேவர் தந்த எழுச்சியால், நேதாஜியின் ராணுவத்தில் பல இளைஞர்கள் இணைந்தனர்.

    இந்த கூட்டத்தை பார்த்து இந்தியா கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும். இந்த புத்தாண்டு தினத்தில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

    நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவாதம் அளித்துள்ளோம்.

    திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. தென் இந்தியாவில் புல்லட் ரெயில் விடப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.

    தமிழகத்தில் பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு பெருகியுள்ளது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

    தென் இந்தியாவில் புல்லட் ரெயில் விடப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.

    பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.800 கோடிக்கு நிதியுதவி அளித்துள்ளோம்.

    தமிழ் மொழியை உலக அளவில் பிரபலப்படுத்த பாஜக உறுதி.

    செங்கோலாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டாக இருக்கட்டும், திமுக அதனை எதிர்த்துள்ளது.

    பாஜக தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
    • அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தொடர்ந்து, வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    • பறக்கும் படையினர் அங்கு சோதனை செய்தபோது 20 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் சுந்தரி தலைமையிலான பறக்கும் படையினர் நெல்லை சட்டமன்ற தொகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை தச்சநல்லூரில் இருந்து டவுன் செல்லும் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையோரம் தேனீர்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை கவனித்தனர். இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் விரைந்து சென்றனர்.

    இதை பார்த்த சிலர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கு சோதனை செய்தபோது 20 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    • 2 பேரின் உடலையும் போலீசார் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாசானம். இவரது மகன் சுடலைமணி (வயது 27).

    இவரும், பாளை சக்தி நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் மகாராஜன் (24), அதே பகுதியை சேர்ந்த அருண் (21) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.

    இவர்கள் இன்று காலை பாளை-திருச்செந்தூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள தனியார் பள்ளியின் எதிரே தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு கிணறு அமைந்துள்ள பகுதியின் நுழைவாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததால் 3 பேரும் சுவர் ஏறி குதித்து குளிக்க சென்றுள்ளனர்.

    இதில் மகாராஜனுக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மகாராஜன் தண்ணீரில் மூழ்கினார்.

    உடனே அவரை காப்பாற்றுவதற்காக சுடலை மணி போராடியுள்ளார். ஆனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

    இதைப்பார்த்த அருண் உடனடியாக பாளை போலீஸ் நிலையத்திற்கு ஓடி சென்று தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பாளை போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றில் மூழ்கிய சுடலைமணி, மகாராஜன் ஆகிய 2 பேரையும் தேடிய நிலையில் சுடலை மணி முதலில் பிணமாக மீட்கப்பட்டார்.

    சிறிது நேரத்தில் மகாராஜனும் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர்கள் 2 பேரின் உடலையும் போலீசார் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
    • களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும், மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதில் தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் அதிகபட்சமாக 2.6 சென்டி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 1.9 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 1.8 சென்டிமீட்டரும், ஊத்தில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும் இன்றும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.60 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாநகர பகுதி முழுவதும் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    • அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.
    • நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்றுடன் இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜனதா வெற்றி முனைப்பில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.

    வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பேசியுள்ள நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக இன்று நெல்லை வருகிறார்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பேச உள்ளார். அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • ஹெலிபேடு உள்ள மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    17-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், தேசிய கட்சிகள் மற்றும் மாநிலத்தின் பிரதான கட்சிகளின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேசிய கட்சியான பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வலுவான கூட்டணி அமைத்து பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

    பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி ஏற்கனவே 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா-கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய நிலையில் தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை(திங்கட்கிழமை) தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார். அவர் நெல்லை மாவட்டம் அம்பையில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.

    நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    நாளை மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அம்பை வரும் பிரதமர் மோடி அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.


    அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு குண்டு துளைக்காத காரில் செல்லும் பிரதமர் மோடி பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு மேடைக்கு செல்கிறார். அங்கு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருபுறம் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    ஹெலிபேடு உள்ள மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. அங்கு சுற்றிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு வெளியாட்கள் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

    அம்பை பொதுக்கூட்ட மேடையில் இருந்து சுற்றிலும் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு டிரோன்கள் பறப்பதற்கு இன்றும், நாளையும் தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அந்த பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி வருகைக்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து நேற்று முதல் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், இன்றும் நாளையும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்காக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேர் அம்பையில் முகாமிட்டுள்ளனர். இதுதவிர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்பநாய் பிரிவு அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மோடியின் வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ×