search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • சாலை ஓர பாறை மீது வேன் மோதி 2 பேர் காயம்
    • போலீசார் அப்புறப்படுத்தினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, அத்தனாவூர் பகுதியில் உழவர்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிறுவனம் உள்ளது.

    இங்கிருந்து 50 கிலோ விதம் 40 மூட்டை சாமையை கொள்முதல் செய்து திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிக்கொண்டு மதியம் ஏலகிரி மலையில் இருந்து வந்து கொண்டிருந்தது.

    ஏலகிரி மலையில் உள்ள 5-வது வளைவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரெனவேன் பிரேக் பிடிக்கவில்லை. வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் திருவண்ணா மலை மாவட்டம் பெரும்பா க்கம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் திருமலை (28) என்பவர் சாலையின் அருகே உள்ள பாறை மீது மோதி சாதுரியமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் திருமலை மற்றும் கிளினராக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ராமு (31) ஆகிய இருவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைகளில் போக்குவரத்து பாதிப்பின்றி விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே நடத்திட அரசு ஆணை
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் லியோ திரை ப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.

    மேற்காணும் விதிமுறைகளை பின்பற்றவும், ஏதேனும் புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறை (04179-222211) மற்றும் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு (04179-221103) தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்
    • 60 அடி ஆழத்தில் இறங்கி உடலை மீட்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த வெப்பாளம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50).கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    முதல் மனைவிக்கு ஒரு மகன், மகளும், 2-வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர்.

    முதல் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த 15-ந் தேதி வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் செல்வம் கூறிவிட்டு சென்றார்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அப்போது செல்வம் பிணமாக மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வாணியம்பாடி தாலுகா போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி செல்வம் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் லாரியை நிறுத்தினர்
    • போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக கன்டெய்னர் லாரியை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார்.

    இதை கண்ட பின்னால் வ ந்த மற்ற வாகனங்களின் டிரைவர்கள் பீதியடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவியது.

    இதை பார்த்த பொதுமக்கள் லாரியை நிறுத்தினர். மேலும் டிரைவரை பிடித்து போலீசாரை வரவழைத்து டிரைவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அம்பலூர் போலீசார் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படும் வகையில் குடி போதையில் கன்டெய்னர் லாரியை ஒட்டிய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
    • 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிட ஏதுவாக, உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி உபகரணங்களான வலைகள் மற்றும் பரிசல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் மற்றும் மீன்பிடி பரிசல் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    இத்தி ட்டத்தின் வாயிலாக ஏற்கனவே கடந்த 3 ஆண்டு களுக்குள் வலை மற்றும் பரிசல்கள் பெற்ற வர்கள் விண்ண ப்பிக்க தகுதிய ற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வாங்கும் வலை மற்றும் பரிசல்கள் உரிய ஆய்வுக்கு பின்னரே மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இந்த செய்தி வெளியிட்டு நாளிலிருந்து வெளிவந்த ஒரு வார காலத்திற்குள் வேலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக முகவரி எண் 16, 5-வது மேற்கு குறுக்கு தெரு காந்தி நகர், காட்பாடி, வேலுார்-632006 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது நேரில் சென்று தேவையான விவரங்களை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாம்குமார், இவரது மனைவி சோனியா (வயது 23) இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

    சோனியாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சோனியா வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    இதை கண்ட அவருடைய கணவர் சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சோனியா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்தி ட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நிகழாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in இணையதள முகவரியில் சென்று ஆதார் எண்ணை அளித்து இணைக்க செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரி யில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுக வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் நாளை முதல் செயல்படத் தொடங்கும்.

    இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
    • அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக உள்ளது. இந்த மலை கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

    இதில் மங்களம் கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டு, குழியுமாக காணப்பட்டது.

    அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மக்களின் கோரிக்கையை ஏற்று என்.என்.டி. நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.

    இதனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சாலையின் வளைவில் திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வெங்கடசமுத்திரம் அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 60). ஆம்பூரில் உள்ள கடையில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக கோவிந்தாபுரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். சாலையின் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த மாட்டி வண்டியின் மீது எதிர்பாராத விதமாக இவர் ஓட்டி வந்த பைக் மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
    • உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம் (53). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கிணற்றில் மான் குட்டி ஒன்று தவறி விழுந்து

    உயிரிழந்துள்ளதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து, வாணியம்பாடி வனவர் வெங்கடேசன் தலைமையில், வனக் காப்பாளர்கள் நாகராஜ், அரவிந்தன், பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து உயிரிழந்த நிலையில் மான் குட்டியை மீட்டனர்.

    பசி காரணமாக மான் குட்டி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர். இறந்த மான்குட்டி உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

    • ஒரே இடத்தில் உடல்களை புதைக்குமாறு வீடியோ பதிவு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 18). பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

    இவரது தாய் மாமன் சரண்ராஜ். நாட்டறம்பள்ளி பகுதியில் பைக் ஷோரூமில் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.

    ஜீவிதாவும், சரண்ராஜும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரண்ராஜிடம் கடந்த சில மாதங்களாக ஜீவிதா பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண்ராஜ் நேற்று முன்தினம் ஜீவிதாவை, கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு, தப்பி ஓடி தலைமறைவானார்.

    மேலும் சரண்ராஜ் தானும், ஜீவிதாவும் 4 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், தற்போது தற்கொலை செய்து கொள்வதாகவும், இறந்த பின்பு ஒரே இடத்தில் உடல்களை புதைக்க வேண்டும் எனவும் செல்போனில் பேசி வீடியோவாக பதிவு செய்திருந்தார். கடிதம் ஒன்றும் எழுதி வைத்திருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரண்ராஜை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடையில் சரண்ராஜ் அமர்ந்தி ருப்பதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்ப டையினர் வெலக்கல்நத்தம் பகுதிக்கு விரைந்து சென்று சரண்ராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போது அவர் விஷம் குடித்து விட்டதாக கூறியதால் உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேர் கும்பல் கைது
    • வாகனங்கள் மூலம் கிராமங்களுக்கு சென்று பரிசோதனை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பேராம்பட்டு கிராமத்தில் உள்ள குடிசை வீடு ஒன்றில் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்வதாகவும், பெண்ணா இருந்தால் கருகலைப்பு செய்வதாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், மாவட்ட போலீஸ் துறையினர் உதவியுடன் அந்த குடிசை வீட்டில் சோதனை நடத்தினர். இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் தரகர் ஆகியோர் இருந்தனர்.

    போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்ட தரகர் சங்கர் ( வயது 45) என்பதும், இவர் திருப்பத்தூரில் இயங்கி வரும் சுகுமார் ஸ்கேன் மையத்தின் தரகர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சங்கரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்கேன் மையத்தின் உரிமையாளர் சுகுமார் உள்பட 4 பேர் தலைமறை வாகினர். இவர்களை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை யிலான தனிப்ப டை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று ஸ்கேன்மைய உரிமையாளர் சுகுமார் (55), வேடியப்பன் (42), விஜய் (27), சிவா (36) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஸ்கேன் மைய உரிமை யாளர் சுகுமாரின் மகள் மற்றும் மகன் ஆகியோர் டாக்டராக வேலை செய்து வருகின்றனர். இவர் மீனாட்சி தியேட்டர் எதிரே அலுவலகம் வாடகை எடுத்து அதில் கருக்கலைப்பு மற்றும் குழந்தை பாலினம் கண்டறிவதை செய்து வந்தார்.

    அப்போது சப்- கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் அந்த மையத்தை மூடி சீல் வைத்து சுகுமாரை கைது செய்தனர். சுகுமார் ஏற்கனவே 5 முறைக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இருப்பினும் அவர் வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு சென்று ஸ்கேன் செய்வது, கல்கலைப்பு செய்வது போன்ற சம்பவங்களில் தொடர்ந்த ஈடுபட்டு வந்தார்.

    ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருகலைப்பு செய்துள்ளார். அதேபோல் வேடியப்பனும் ஏற்கனவே 2 முறை கருகலைப்பு சம்மதமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர்களுக்கு யாரோ பின்பலம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×