என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருவாரூர்
- போதிய தண்ணீர் வராததால் குறுவை பயிர்கள் கருக தொடங்கின.
- நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொடும்பாவியை இழுத்து சென்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட இடங்களில் போதிய தண்ணீர் வராததால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற, வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் கொடும்பாவி இழுத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
களிமண்ணால் கொடும்பாவி கட்டி வயிற்று நடுவே தீச்சட்டி வைத்து நெடும்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொடும்பாவியை இழுத்து சென்றனர்.
பின், முள்ளியாற்றில் கொடும்பாவியை விட்டனர்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன.
- 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.
மன்னார்குடி:
மன்னார்குடி அடுத்த பயங்காடு கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.
போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் இறுதி ஆட்டமானது நேற்று நடை பெற்றது.
இதில் சென்னை சாய் கபடி அணி முதல் இடத்தை பிடித்து, ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வென்றது.
தொடர்ந்து, 2-ம் இடத்தை தமிழ்நாடு வனத்துறை காவல்துறை அணியும், 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.
போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
- கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
- லாவண்யா நகைகளை வீட்டில் தானே மறைத்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடியது தெரியவந்தது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் மகாலட்சுமி நகரில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார்.
இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி லாவண்யா (வயது 35).
இந்நிலையில் தனது மனைவி லாவன்யா, மகளுடன் கடந்த செப்டம்பர், 30 ம் தேதி செட்டி சத்திரம் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 75 பவுன் திருட்டு போனது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பிரபாகரன், ராஜ்மோகன், முத்து ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் லாவண்யாவை நேரில் அழைத்து விசாரித்து எச்சரிக்கை செய்தனர்.
பின்னர் தனது வீட்டில் மற்றொரு பேக்கில் 73 பவுன் நகை இருந்ததாக கூறி காவல் காவல் நிலையத்தில் லாவன்யா ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து லாவண்யாவை தங்க நகையை வீட்டில் தானே மறைத்து வைத்துக் கொண்டு நாடகம் ஆடியதாகவும், பொய் புகார் அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் நேற்று இரவு லாவன்யாவை கைது செய்தனர்.
- ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.
- இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை கீழக்காட்டிற்கு மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல். முருகன் ஆகியோர் வருகை தந்தனர்.
அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட பா.ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அங்கிருந்த கொடிகம்பத்தில் கட்சி கொடியை மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா ஏற்றினார்.
அதனை தொடர்ந்து, தம்பிக்கோட்டை கீழக்காடு இறால் பண்ணை உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் அவர்களிடம் கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-
ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.
மீதமுள்ள 6 மாதங்கள் பயன்பாடு இல்லாத போது கே.வி.ஏ. ரூ.40-ல் இருந்து ரூ.150-ஆக மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.
இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.
இறால் பண்ணைக ளுக்கான புதிய லைசென்சு காலதாமதமின்றி வழங்கவும், ரினிவல் விரைந்து வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் இறால் பண்ணைகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் இறால் பண்ணை தொழில் நடைபெற்று வருகிறது.
எனவே, இப்பகுதியில் இறால்களை பதப்படுத்த குளிர்சாதன கிடங்கு அமைத்துத்தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொள்கை ரீதியாக தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்கிறதா?
- இதுவரை ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்?
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெரியகுடி எண்ணெய் கிணற்றில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி கியாஸ் வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. இதை தொடர்ந்து அப்போதைய மாவட்ட கலெக்டர் நடராஜன், இந்த கிணற்தை மூட உத்தரவிட்டார்.
அதன் பிறகு 2022-ம் ஆண்டு இந்த கிணற்றை செயல்பாட்டு கொண்டு வருவதற்கு மறைமுகமாக நடவடிக்கை நடந்தது. இதை அறிந்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தோம்.
இதை தொடர்ந்து அப்போதைய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்டு 13-ந் தேதி சமாதான கூட்டம் நடந்தது.
இதில் ஓ.என்.ஜி.சி. அதிகாரி, இந்த கிணற்றை 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிரந்தரமாக மூட அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதுவரை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த சில நாட்களாக இந்த எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் வெளியேறி வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொள்கை ரீதியாக தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்கிறதா?, இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன்?, என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.
இதுவரை ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்?
திருவாரூர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் கொடுத்த அடிப்படையில் இந்த எண்ணெய் கிணற்றில் இருந்து குழாய்களை அகற்றி விட்டு நிரந்தரமாக மூடி சிமெண்டு தளம் அமைக்க வேண்டும்.
இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில துணை செயலாளர் செந்தில் குமார், மாவட்ட துணை செயலாளர் முகேஷ், கோட்டூர் வடக்கு ஒன்றிய தலைவர் சேகர் உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.
- 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் கருக தொடங்கின.
- ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 அரசு நிவாரணம் தொகை அறிவித்துள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியாகும்.
முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் இந்த பகுதிக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீரை மட்டுமே கொண்டு இப்பகுதியில் குருவை, சம்பா, தாளடி, பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளான திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதிகளுக்கு முள்ளி ஆறு. பாமணி கோரையாறு. அரிச்சந்திரா அடப்பாறு என அனைத்து ஆறுகளின் பாசன வாய்க்கால்கள் வடிகால்களை முறையாக முழுமையாக தண்ணீர் வந்துசேரவில்லை.
இதனால் நடப்பாண்டில் திருத்துறைப்பூண்டி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர், முத்துப்பேட்டை பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்ட குருவைப் பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டது.
இதனால் பல விவசாயிகள் கருகிய குருவைப் பயிர்களை டிராக்டர்களை கொண்டு அழித்து சம்பா பயிரை நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா விவசாய பணிகளை மேற்கொண்டனர்.
தற்பொழுது கர்நாடகாவில் காவேரியில் தண்ணீர் தர முடியாது என பல்வேறு போராட்டங்களில் தீவிரமடைந்த நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் வராத நிலையிலும், மழை இல்லாத காரணத்தினாலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் 14 ஆயிரம் ஏக்கரில், முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீர் மழை இன்றி கருக தொடங்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குளங்களில் இருந்து இறவை இஞ்சின் மூலம் வயல்கலுக்கு தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.
குளங்களில் உள்ள தண்ணீரை இறைப்பதால் கால்நடைகள் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பாதிக்கபடுகின்றது.
மேலும் குளங்களில் வாய்க்காலில் உள்ள நீரை கொண்டு தற்போது பயிரை காப்பாற்றினாலும் மழை இல்லாமல் கடும் வெயிலால் கருகும் பயிரை வரும் காலங்களில் எப்படி காப்பாற்றுவது என விவசாயிகள் கண்ணீர் வடிகின்றனர்.
குறுவை பாதிப்பிற்கு ஹெக்டருக்கு 13.500 ரூ அரசு நிவாரணம் தொகை அறிவித்துள்ளது. அதனை அதிகாரிகள் பாரபட்சமின்றி ஆய்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.
மன்னார்குடி:
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுத்தி வந்தது.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி, பெரியக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து இருந்தது. இதில் ஒரு கிணற்றில் கடந்த 2013-ம் ஆண்டு அதிக அழுத்தம் காரணமாக கியாஸ் வெளியேறியது.
இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து இந்த எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டது.
இந்நிலையில் பெரியக்குடி கிராமத்தில் மூடப்பட்ட ஒரு எண்ணெய் கிணற்றில் இருந்து நேற்று காலை திடீரென அதிகளவில் கியாஸ் கசிந்தது. தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியது. அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அதிகளவில் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியதால் கிராமமக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர்.
எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் ஆயில் மற்றும் கியாஸ் எதுவும் வெளியாக வில்லை எனவும் காற்று மட்டுமே வருகிறதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இதனை இன்னும் 2 நாட்களில் நிறுத்தி விடுவோம் என தெரிவித்தனர்.
- 100 சென்பக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- 100 நாதஸ்வர கலைஞர்கள், மிருதங்க கலைஞர்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மன்னார்குடி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் 100 சென்பக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர் பி.ராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி 100 நாதஸ்வர கலைஞர்கள், மிருதங்க கலைஞர்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர், 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு,மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராசன், நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி எஸ்.டி.முத்துவேல் (மேற்கு), சிவா (கிழக்கு), நீடாமங்கலம் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.கே.முருகானந்தம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
- குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி, திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் திருத்துறைப்பூண்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடையில் இருந்த குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.
- எண்ணெய் கிணறு உள்ள பகுதியை சுற்றி சின்னகுறுவாடி, பெரியகுடி, அம்பத்தார் குளமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
- உடனடியாக ஓஎன்ஜிசி துறை அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்.
இந்த கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் நிறைவடைந்தால் அந்த 2 எண்ணெய் கிணறுகளும் மூடப்பட்டது. இந்த எண்ணெய் கிணறு உள்ள பகுதியை சுற்றி சின்னகுறுவாடி, பெரியகுடி, அம்பத்தார் குளமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அதில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை காரியமங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் எண்ணெய் கிணறு உள்ள பகுதி வழியாக நடந்து சென்றனர். அப்போது அங்கு கியாஸ் வாசனை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் எண்ணெய் கிணறு அருகே சென்று பார்த்த போது மூடப்பட்ட எண்ணை கிணற்றிலிருந்து அதிகளவில் கேஸ் வெளியேறி வருவது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓஎன்ஜிசி துறை அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- கொறுக்கை ஊராட்சியில் அதிகமான பனை மரங்கள் உள்ளது.
- உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.
திருத்துறைப்பூண்டி:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அடுத்த கொறுக்கை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பனை ஓலை தொழில்நுட்ப பயிற்சி 20 பெண்களுக்கு நடத்த ப்பட்டது.
பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜானகி ராமன் தலைமை தாங்கி பேசுகையில்:-
கொறுக்கை ஊராட்சி யில் அதிகமான பனை மரங்கள் உள்ளது. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் பயன்களை யாரும் அறியவில்லை.
இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மக்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும். எதிர்காலத்தில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க உள்ளது.
மேலும், இது போன்ற பயிற்சிகள் தொடர்ந்து செய்ய ஏற்பாடு செய்ய ப்படும் என்றார்.
நிகழ்ச்சி யில் பயிற்சி யாளர் ஜான்சி ராணி பயிற்சி விபரங்களை குறித்து எடுத்துரைத்தார்.
ஊரக வாழ்வா தார இயக்க வட்டார மேலாளர் புரு ஷோ த்தமன், மகளிர் கூட்ட மைப்பு தலைவி சுமதி, பணித்தள பொறுப்பாளர் சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுக்க வேண்டும்.
- இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்த வேண்டும்.
மன்னார்குடி:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜெயகணபதி தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் இளம் தொழில் வல்லுனர் சிவலிங்கம், மன்னார்குடி ஹெச்.டி.எப்.சி. வங்கியின் கிளை மேலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆடு வளர்ப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் லட்சுமி வரவு செலவு தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டமைப்பின் துணை தலைவர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
திட்டத்தின் நோக்கம் குறித்து கூத்தாநல்லூர் நிர்வாக இயக்குனர் முருகையன், முதன்மை செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் இடையூர் மாலா, விளக்குடி உஷா, கமலாபுரம் ஆரோக்யராஜ், சாந்தா, நீடாமங்கலம் சங்கீதா உள்பட 600-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆடு வளர்ப்பு உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அஸ்வின் அனைவரையும் வரவேற்றார்.
முடிவில் திருவாரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அறிவழகன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தொழில் முனைவோரை உருவா க்குவது, பாரதி மூலங்குடி, தில்லைவிளாகம், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குவது, ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுப்பது, இயற்கை விவசா யம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்