search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • நெல் கொள்முதல் நிலையங்களில் 22310 டன் நெல்மூட்டைகள் பெறப்பட்டது.
    • சரக்கு இரயில் மூலம் 8000 டன் நெல்மூட்டைகள் அனுப்பபட்டது,

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20000 ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி நடைபெற்று அறுவடைக்கு பின் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22310 டன் நெல்மூட்டைகள் பெறப்பட்டது.

    பின்னர் அந்த நெல்மூ ட்டைகள் திருத்துறைப்பூண்டியில் இருந்து சிவகங்கை புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரவை மில்களுக்கு சரக்கு இரயில் மூலம் 8000 டன் நெல்மூட்டைகளும், லாரி மூலம் 11000 டன் நெல்மூட்டைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ஏற்றி அனுப்பபட்டுள்ளது.

    மேலும் மீதம் உள்ள நெல்மூட்டைகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுவதாக அதிகா ரிகள் துணை மேலாளர் ஏ. கண்ணன் தெரிவித்தார்.

    • துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மன்னார்குடி 110 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்குடி நகரம், அசேஷம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், மூவாநல்லூர், பருத்திகோட்டை, நாவல்பூண்டி, பாமணி, சித்தேரி, கூத்தநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
    • நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர்மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பருத்திச்சேரியில் மழை காலத்தில் ஏற்படும் காய்சல், இருமல் , சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்று வந்த நிலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

    வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முத்துகுமாரசாமி மேற்பார்வையில் நடந்த முகாமில்பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    • காடுகளை அழிப்பதால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகி வருகிறது.
    • மறுசுழற்சி அல்லது எளிதில் மக்ககூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் அனைவரையும் வரவேற்றார்.

    கலெக்டர் சாருஸ்ரீ கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

    பசுமை மிஷன் உதவி இயக்குனர் மனீஸ் மிஸ்ரா, பூவுலகின் நண்பர்கள் இயக்க சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன், பருவநிலை மாற்ற கொள்கை நிபுணர் அருண்பாண்டியன், அண்ணா பல்கலைகழக பேராசிரியர் பவுத்ர பிரியா, டாக்டர் பாலாஜி, டாக்டர் செல்வம், டாக்டர் வேல்முருகன், டாக்டர் பாரதி, சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் பிரபாகரன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

    கருத்தரங்கில் காடுகளை அழிப்பதால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகி வருகிறது.

    இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது எனவே காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மறுசுழற்சி அல்லது எளிதில் மக்ககூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    திடக்கழிவு மேலாண்மை, நீர்நிலை பாதுகாப்பு போன்றவை முக்கியமானவை எதிர்கால சந்ததிகளுக்கு நாம் வளமான பூமியை விட்டு செல்லவேண்டும் என வலியுருத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி குழும பொது மேலாளர் மாறன்,மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி, பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார், வனம் அமைப்பை சேர்ந்த கலைமணி, வனத்துறை, தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • பராமரிப்பு பணிகள் நடைெபறுவதால் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது.
    • காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    திருவாரூர்:-

    திருவாரூர் மின்வாரிய இயக்குதல், பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையம் மற்றும் கப்பல் நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம்,

    தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயந்தாங்குடி, மாவூர் மற்றும் அடியக்கமங்கலம், துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அடியக்கமங்கலம் , இ.பி.காலனி, சிதம்பரம் நகர், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பாம்புலியூர், புதுப்பத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 18-ந் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜாம்புவானோடையில் பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • 23-ந்தேதி நள்ளிரவு சந்தன கூடு வளம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக புகழ் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 722-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று அதிகாலை இடும்பாவனம் கேசவன் குழுவினர் நாதஸ்வரம் மங்கள இசையுடன் மத ஒற்றுமை எடுத்துக்காட்டாக தொடங்கியது.

    பின்னர் மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடியை சிறப்பு வழிப்பாடுகள் பிராத்தனையுடன் தர்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்காரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.

    பின்னர் புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.

    இதில் பூக்களால் ஆன புனித கொடி சுமந்த பல்லாக்கு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், குதிரை, ஒட்டகங்கள் பேண்டு வாத்தியகங்கள், தப்ஸ் கச்சேரி, வண்ணத்துப்பூச்சி கலைஞர்களின் நடனங்கள் என ஊர்வலமாக வந்தது.

    ஊர்வலம் தர்ஹாவிலி ருந்து புறப்பட்டு ஜாம்புவா னோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் கோரையாறு பாலம் சென்று திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றது.

    அங்கு ஆட்டோ சங்கம், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள் நெடுவேங்கும் வியாபாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பழைய பேரூந்து நிலையத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறு பாலம், ஜாம்புவானோடை சென்று தர்காவை அடைந்தது.

    பின்னர் தர்கா அருகில் உள்ள அம்மா தர்கா, ஆற்றாங்கரை பாவா தர்கா சென்று மீண்டும் தர்காவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது.

    இதையடுத்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் துவங்கியது.

    சிறப்பு துஆ ஓதி அதனைத்தொடர்ந்து சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு 9மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து கந்தூரி விழா துவங்கியது. இதில் ஆயிரக்காணக்கான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்துக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகநாதன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பலத்த பாதுக்காப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.

    கந்தூரி விழாவின் முக்கிய விழாவான வரும் 23-ந்தேதி நள்ளிரவு சந்தன கூடு வளம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வரும் 27-ந்தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.

    • திருவாரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
    • தில்லைவிளாகம் அரசு பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:-

    திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.

    இதில் தில்லை விளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

    கேடயத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

    இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படுகிறது.
    • ஆண்டு வருமானம் 1.00 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    திருவாரூர்:-

    பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை சார்ந்த மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சலவை தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை சார்ந்த மக்கள் சுய தொழில் செய்து பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் இத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது,

    ஆண்டு வருமானம் 1.00 லட்சத்திற்கு மிகாமலும் 20 வயதிற்கு மேம்பட்ட ஆண் பெண் என இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர், மேலும் இத்திட்டத்திற்கு கீழ்கண்டுள்ளவாறு ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்.

    மனுதாரர் விண்ணப்பம், சாதிச்சான்று நகல், வருமானசான்று நகல், குடும்ப அட்டை நகல், 7 வருடங்களாக விலையில்லா சலவை பெட்டி அரசிடமிருந்து பெறவில்லை மற்றும் இவர் சலவை தொழில் செய்து வருகிறார் என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்று அசல், புகைப்படம்-2, ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று நகல் இணைக்கப்படல் வேண்டும்.

    எனவே, மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்,

    மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2,ஆம் தளத்தில் அறை எண் 84 உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இத்தகவலை திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வந்தது.

    நேற்று இரவு முதல் தற்போது வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக திருவாரூர், நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், கொல்லுமாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையிலான மழை அளவு பட்டியலில் திருவாரூரில் 74 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 66 மில்லி மீட்டரும், குடவாசலில் 61 மில்லி மீட்டர், வலங்கைமானில் 38 மில்லி மீட்டர், மன்னார்குடியில் 50 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 58 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 62 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 15 மில்லி மீட்டரும் என மாவட்டம் முழுவதும் 476 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த மழையின் காரணமாக சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோட்டரி கிளப் ஆப் திருத்துறைப்பூண்டி சார்பில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.
    • ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    நாகை மாவட்டம் கீழையூர் ராம்கோ தொண்டு நிறுவனத்தில் ரோட்டரி கிளப் ஆப் திருத்துறைப்பூண்டி சார்பில் தீபாவளி திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார், செயலாளர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

    இந் நிகழ்ச்சிக்கு துணை ஆளுநர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சுமார் 35 பயனாளிகளுக்குசங்க உறுப்பினர்கள் பங்களிப்புடன் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில் ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பிக்க ப்பட்டது.

    முன்னாள் ஆளுநர் ஆர்.எஸ். ஆர் இளங்கோவன் உணவுகளையும் வழங்கினார்.

    இதில் முன்னாள் தலைவர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் பத்மநாதன்நன்றி கூறினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொண்டு நிறுவன ஊழியர்கள் செல்வம் மற்றும் எழிலரசி ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது
    • ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசு வழங்கப்பட்டது

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மொபைல் கடை நடத்தி வருபவர் ஹபிபுல்லா. சமூக ஆர்வலர்.

    இவர் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தன்னால் முடிந்த உதவியும், சமூக வலைதளம் மூலம் நண்பர்கள் உதவியுடன் சாலையோரம் வசிக்கும் எளியவர்களுக்கு உணவு, உடை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் ஹபிபுல்லா தீபாவ ளியை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ஸ்ரீராக வேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கினார்.

    கோவில் நிறுவனர் ஜெகதீ சன் நகர்மன்ற உறுப்பினர் தேவி சீராளன், சமூக செயற்பாட்டாளர் சீராளன் கோவில் அர்ச்சகர் அச்சிதராவ் உள்ளிட்டோர் ஹபிபுல்லாவிற்கு தீபாவளி வாழ்த்துகளை கூறி ஸ்ரீராகவேந்திரர் படத்தை வழங்கினர்.

    • சட்ட ஒழுங்கு பிரச்சனையால் தூரத்திலிருந்து போலீஸ்காரர்கள் அழைத்து வரபடுகிறார்கள்.
    • ‘காவலர் தங்கும் இல்லம்’ கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் போதுதொலை தூரத்திலிருந்து போலீஸ்காரர்கள் அழைத்து வரபடுகிறார்கள்.

    அப்படியே அழைத்து வரும் பட்சத்தில் இப்பகுதியில் தங்க வைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.

    அதனால் முத்துப்பேட்டை பகுதியில் காவலர்கள் தங்குமிடம் அமைக்க உயர் காவல் அதிகாரிகள் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரையித்தனர்.

    இதனை ஏற்றுக்கொ ண்ட தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் சென்ற சட்டமன்ற கூட்டத்தில் முத்துப்பே ட்டையில் ரூ.12கோடியில் காவலர்கள் தங்குமிடம் கட்ட அறிவித்தார்.

    அதன்படி முத்துப்பேட்டையில் இடம் தேர்வு பணிகள் நடந்து வந்தநிலையில் கடந்த ஆண்டு கோவிலூர் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலோர காவல் படை காவல் நிலையம் எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் 'காவலர் தங்கும் இல்லம்' கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதற்கு திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை வகித்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டிதுவக்கி வைத்தார்.

    இதில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கட்டிட பொறியாளர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    ×